சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (35). மீனவர். இவரது மனைவி சுகன்யா. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சுகன்யாவிற்கும், ரஞ்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 8 ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகிறனர். எந்த நேரமும் குடிபோதையில் இருக்கும் ரஞ்சித் எப்போதாவது மீன் பிடிக்க கடலுக்கு செல்வது வழக்கம் என, கூறப்படுகிறது.
மேலும் அடிக்கடி குடித்துவிட்டு கடைகளில், வருவோர் போவோர் ஆகியோரிடம் ரகளையில் ஈடுபட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று நெட்டுக்குப்பம் கடற்கரையில் தலை நசுங்கிய நிலையில் ரஞ்சித்குமார் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் எண்ணூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரஞ்சித்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது ரஞ்சித்குமாரும், அதே பகுதியை கோவிந்தராஜ் (57) என்பரும் நேற்று காலை முதல் குடிபோதையில் எண்ணூர் பகுதியில் சுற்றிவந்துள்ளனர்.
அப்போது போதையில் அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இன்று இருவரும் மீண்டும் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் கோவிந்தராஜ் பெரிய கல்லை எடுத்து ரஞ்சித்குமாரின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.