பாளையங்கோட்டை நகரின் மையப்பகுதியில் தலைமை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மூன்று அடுக்கு கொண்ட இந்தக் கட்டடத்தின் தரைத் தளத்தில் தபால் மற்றும் அதிகாரிகள் அலுவலகம், வங்கி ஆகியவை செயல்படுகின்றன. முதல் தளத்தில் சிக்கன நாணய சங்கம், கணக்குப் பிரிவு, பயிற்சி மையங்கள் இயங்குகின்றன. இரண்டாம் தளத்தில் கண்காணிப்பாளர் அறை இருக்கிறது. கடந்த 14ம் தேதி இரண்டாம் தளத்தில் இருந்து திடீரென புகை கிளம்பியிருக்கிறது.
இதை தபால் ஊழியர்கள் கவனிக்கவில்லை. ஆனால், அந்த வழியாகச் சென்றவர்கள் தீயணைப்பு அலுவலகத்திற்கு போன் செய்திருக்கிறார்கள். தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்தபிறகுதான் இரண்டாம் தளத்தில் தீப்பிடித்திருப்பதே ஊழியர்களுக்குத் தெரிய வந்திருக்கிறது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின்னரே தீ அணைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தபால் நிலைய ஊழியர் ஒருவரிடம் கேட்டோம். அவர் கூறுகையில், ’’தபால் நிலையத்தில் தீப்பிடித்ததால் கம்யூட்டர்கள், பிரிண்டர்கள் எரிந்து போயிருக்கின்றன. மற்றபடி முக்கியமான ரெக்கார்டுகள் எரியவில்லை. தவிர இது நாச வேலை அல்ல. மின்கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கிறது’’என்றார். என்றாலும் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.