தர்மபுரி அருகே அரசு பள்ளிக்கு மாணவர்களுக்காக ரூ.10 லட்சம் மதிப்பில் 10 கணினிகள் மற்றும் முன்னாள் ஆசிரியர்களுக்கு பொற்காசுகள் வழங்கி முன்னாள் மாணவர் அசத்தியுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ள நரிப்பள்ளி கிராமம்.இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(47) சாப்ட்வேர் இன்ஜினியர்.இங்குள்ள அரசு பள்ளியில் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு வரை படித்தார்.தற்போது சென்னையில் பணியாற்றி வரும், இவர் தான் படித்த நரிப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பில் 10 நவீன கணினிகள் மற்றும் அதற்கான உபகரணங்கள் அன்பளிப்பாக அளித்துள்ளார்.
அதனை தான் பயின்றபோது, தனக்கு கற்பித்த ஆசிரியர்களான தற்போது ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்கள் மணி, மாரியப்பன்,சின்னப்பன், வடிவேல், சுப்பிரமணி, தங்கவேல், ராமசாமி, சாமிநாதன் ஆகியோர் மூலம் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டுக்கு அளித்தார்.
இதனையடுத்து, நடந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு தங்க காசுகள் பரிசாக வழங்கி பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தப்பட்டனர்.
தொடர்ந்து அப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவின் போது கிருஷ்ணகுமார் கூறுகையில், தான் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் பணியாற்றும்போது, அங்குள்ள பள்ளிகள் கணினி மயமாக்கப்பட்டு நவீன மயமாக இருந்ததை கண்டு, அதேபோல் தான் பயின்ற கிராமப்புற பள்ளிக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தற்போது பத்து கணினிகள் வழங்கி உள்ளதாகும். இனிவரும் காலங்களில் வருடம்தோறும் பள்ளிக்கு வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்போவதாகவும் தெரிவித்தார்.
இவ்விழாவில், ஆசிரியர்கள் பாரதிராஜா, சத்திய நாராயணன், பொதுமக்கள்,பள்ளி மாணவ,மாணவியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.