வழிப்பறி வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் வசந்தி தன்னை பணியில் மீண்டும் சேர்க்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த டெய்லரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டார்.
பின்னர், அவர் காவல் ஆய்வாளர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், தனது பணி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி வசந்தி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 'நான் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக பணிபுரிந்த போது கடந்த 5.7.2021-ல் சிலர் கள்ள நோட்டுகளை மாற்றுவதாக தகவல் கிடைத்தது.
இந்த வழக்கில், நடவடிக்கை எடுத்த நிலையில், வழக்கில் தொடர்புடைய நபரிடம் இருந்து நான் ரூ.10 லட்சம் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் என் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து என்னை கைது செய்தனர்.
இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் எனக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் நிபந்தனைபடி என்னால் மதுரையை விட்டு வெளியேற முடியவில்லை.
இதனால், என்னால் விருதுநகரில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக முடியவில்லை. இருப்பினும் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அனுப்பினேன்.
இந்த நிலையில் என்னை பணியிலிருந்து நீக்கி 11.4.2023-ல் மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவிட்டார். பணி நீக்க உத்தரவுக்கு முன்பு எனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கவில்லை.
இதனால் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை எஸ்.பி. சிவபிரசாத் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'இவர் மீது 2 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகள் இவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்து உள்ளனர். எனவே, பணி நீக்கம் செய்து காவல் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது' என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- மதுரை பாலா