கடலூரில் காவல்நிலைய வாசலில் இருந்த 60-ஆண்டுகள் பழமையான மரத்தை வெட்டி விற்க முயன்ற பெண் காவல் ஆய்வாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் 60 வருடங்கள் பழமை வாய்ந்த 2 வேப்பமரம் இருந்துள்ளது.
இந்தநிலையில் மரங்கள் பட்டுப்போனதாகக் கூறி கடந்த 10.05.2023 அன்று குமராட்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளர் அமுதா இரண்டு வேப்ப மரங்களையும் வெட்டி விற்பனை செய்வதற்கு முயற்சி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனையறிந்த பொதுமக்கள் உடனடியாக அங்குச் சென்று ஒரு மரம் வெட்டிய நிலையில் கிடந்துள்ளது. மற்றொரு மரத்தை வெட்டுவதற்கு முன்பே தடுத்து நிறுத்தியுள்ளனர். இது குறித்து வட்டாட்சியர், மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் கலையரசி, "ஏன் மரத்தை அடியோடு வெட்டி உள்ளனர்" என கேள்வி கேட்டதாகக் கூறப்படுகிறது. காவல் ஆய்வாளர் அமுதா "நான் மரக்கிளைகளை மட்டுமே வெட்டி அகற்றச் சொல்லிருந்தேன். மரம் வெட்டும் வேலை செய்ய வந்த ஆட்கள் அடியோடு மரத்தைச் சாய்த்து விட்டனர்" எனச் சம்பந்தம் இல்லாமல் பதில் அளித்துள்ளார்.
இதில் சந்தேகமடைந்த வட்டாட்சியர் தமிழ் செல்வன் நடத்திய விசாரணையில், வெட்டப்பட்ட வேப்பமரத்தின் மதிப்பு ரூ.50 ஆயிரம் வரை விலை போகும் எனவும் வெட்டப்பட்ட மரம் ஏலம் விடப்படும் அதேபோல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்
இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சீத்தாராமன், "எங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு உட்பட்டு நல்ல நிலையில் 60 வருடங்கள் பழமை வாய்ந்த வேப்பமரம் உள்ளது. இந்த மரத்தை குமராட்சி காவல் நிலைய ஆய்வாளர் அமுதா எந்த அதிகாரிகளிடம் அனுமதி வாங்காமல்தனது சொந்த பயன்பாட்டிற்கு வெட்டியுள்ளார். இதனை நாங்கள் வண்மையாகக் கண்டிக்கிறோம். இவருக்குத் தானாகச் செயல்பட யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தார்கள்.
இந்த பகுதி பொதுமக்கள் இது தொடர்பாகப் பல அதிகாரிக்குப் புகார் கொடுத்துள்ளனர். ஆனால்
இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் முதல்வர் தனிப்பிரிவு, காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்,துணை ஆட்சியர்,வட்டாட்சியர், உள்ளிட்ட அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் புகார் மனு அளித்துள்ளோம்" என்றார்.
சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் காவல் ஆய்வாளர் அமுதா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.