ஆந்திர பெண் நடன கலைஞர் மர்மச்சாவு-ஏலகிரி சுற்றுலா வந்தபோது நடந்த கொடுமை

இறந்து போன ஹீமா திருமணமாகி ஆறு ஆண்டுகளாக கணவரை பிரிந்து இருக்கிறார். அவருக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
தற்கொலை செய்துக்கொண்ட ஹீமா
தற்கொலை செய்துக்கொண்ட ஹீமா

ஏலகிரிக்கு நண்பர்களுடன் சுற்றுலாவிற்கு வந்து தனியார் விடுதியில் தங்கிய பெண் நடனக் கலைஞர் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்,ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் இருக்கிறது ஏலகிரி மலை. இது தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சில சுற்றுலாத் தலங்கள் பட்டியலில் உள்ளது. இது ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு அருகில் இருப்பதால் அண்டை மாநிலத்தை சேர்ந்த அவர்களும் இங்கு வந்து தங்கி பொழுது போக்குவர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வெதுருகுப்பம் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஹீமா என்ற பெண் நடன கலைஞர், நேற்று முன் தினம் ஏலகிரிக்கு மலைக்கு சுற்றுலா வந்தார். அவருடன் நடன கலைஞர்களாக பணிபுரியும் 2 ஆண் நண்பர்கள் மற்றும் 7 பெண் தோழிகள் வந்திருந்தனர்.

அவர்கள் ஏலகிரி மலையில் உள்ள அத்தனாவூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியின் தனி அறைகள் எடுத்து தங்கினர்.இந்நிலையில் நள்ளிரவில் ஹீமா தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பதறிப்போன அவரது நண்பர்கள், தோழிகள் அவரை தூக்குக் கயிற்றில் இருந்து இறக்கி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஹீமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி போலீசார் ஏலகிரி மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஏலகிரி போலீசார் ஹீமா தங்கிய சுற்றுலா விடுதியில் அறையை சோதனையிட்டனர். அத்துடன் ஹீமாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறந்து போன ஹீமா திருமணமாகி ஆறு ஆண்டுகளாக கணவரை பிரிந்து இருக்கிறார். அவருக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.

போலீஸ் உயர் அதிகாரிகளிடம் பேசியதில், இந்த மரணத்தை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து உடன் வந்தவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். உடன் வந்த இரண்டு பெண்கள் மீது சந்தேகம் வலுத்திருக்கிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும்.’என்றார்.

உல்லாச பொழுதுபோக்கிற்கு வந்த இடத்தில் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் ஏலகிரியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

-அன்புவேலாயுதம்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com