நாங்குநேரி போல் கழுகுமலையில் சம்பவம்... பட்டியல் இன மாணவரை தாக்கிய சக மாணவர்கள்!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் பட்டியல் இன மாணவரை தாக்கி இருக்கிறார்கள் மாற்று சாதியைச் சேர்ந்த மாணவர்கள்.
மாணவர் ஹரி பிரசாத்
மாணவர் ஹரி பிரசாத்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் மகன் ஹரிபிரசாத்(17). பட்டியலின வகுப்பினை சேர்ந்த ஹரி பிரசாத் கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி 11ம் வகுப்பு காமர்ஸ் பிரிவில் படித்து வருகிறார்.

அதே பள்ளியில் கழுகுமலையை சேர்ந்த ராஜகுரு (17), ஷேமந்த் குமார் (17) ஆகியோர் 11ம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளிக்கு வெளியே ராஜகுரு, ஹேமந்த் குமார் இருவரும் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த மாணவர் ஹரி பிரசாத் அவர்கள் சண்டையை தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். இது ராஜகுரு என்கிற மாணவருக்கு பிடிக்கவில்லை. "நீ எப்படிடா எங்களைப் பிரித்து விடலாம், உன்னை பார் வெச்சுக்குறேன்" என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.

பள்ளி முடிந்து அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர். அதைத் தொடர்ந்து ராஜகுரு தன்னுடன் 10 பேரை அழைத்துக்கொண்டு லெட்சுமிபுரம் கிராமத்திற்கு சென்று இருக்கிறார். ஹரி பிரசாத்தின் வீட்டிற்கு நுழைந்து அவரை சாதி பெயரைச் சொல்லித் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஹரி பிரசாத் காயம் அடைந்தார். அவரது செல்போன் முற்றிலுமாக சேதம் அடைந்தது. காயம் அடைந்த ஹரி பிரசாத் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே நாங்குநேரி பள்ளியில் பட்டியலின வகுப்பினை சேர்ந்த மாணவர் மற்றும் அவரது தங்கை தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கழுகுமலையில் பட்டியலின மாணவர் மீது ‌மாற்று சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

காவல் துறையினர், "இது சாதி ரீதியில் நடந்த சண்டையா அல்லது சாதாரண சண்டையா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். மாணவர்கள் மத்தியில் இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வகையில் நாங்கள் நடவடிக்கை எடுக்க இருக்கிறோம்" என்று கூறினார்கள்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com