சுற்றுலா சென்றபோது மகள் பாறையில் இருந்து வழுக்கி விருந்து நீர்வீழ்ச்சியில் மோதியபோது காப்பாற்றச் சென்ற தந்தையும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை, மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுரளி- சந்திர லட்சுமி தம்பதி. இவர்களுக்கு சவுமியா, சாய் நிவேதா என்ற இருமகள்கள். இருவருக்குமே கோடை விடுமுறை என்பதால், குடும்பத்துடன் ஐ.டி நிறுவன ஊழியரான பாலமுரளி சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளார். அதன்படி குடும்பத்தோடு ஏற்காடு சென்று தங்கி இருக்கிறார்கள்.
ஏற்காட்டில் இரு தினங்களுக்கு முன் வந்து தங்கிப் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். நேற்று மதியம் ஏற்காட்டில் உள்ள நல்லூர் நீர் வீழ்ச்சிக்கு மனைவி, மகளோடு போயிருக்கிறார் பால முரளி. அங்கு நீர் வீழ்ச்சியில் மகள்களோடு ஆனந்தமாகக் குளித்து விளையாடி இருக்கிறார்கள். நீர்வீழ்ச்சி பக்கத்தில் உள்ள பெண்கள் உடை மாற்றும் அறை ஒன்று அரசு சார்பில் கட்டப்பட்டு வருகிறது. அதற்குப் பாறையிலேயே படிக்கட்டுகள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
அந்தப் பாறையில் சவுமியா ஏறிச் சென்றுள்ளார். பாறை உச்சிக்குச் சென்றதைப் பார்த்த பாலமுரளி, மிரட்டிக் கொண்டே பாறையில் ஏறியுள்ளார். உச்சிக்குப் போன சவுமியா, கால் வழுக்கு கீழே விழ, மகளைக் காப்பற்ற தந்தையும் பாறை மீது தாவியிருக்கிறார். இருவருமே பிடிமானமில்லாத பாறையில் உருண்டு தண்ணீர் விழும் இடத்தில் சறுக்கியுள்ளனர்.
நீர் வீழ்ச்சியில் குளித்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட, சிலர் வந்து காயமுற்ற பாலமுரளியையும், மகளையும் தூக்கிப் பார்த்திருக்கின்றனர். தலையில் அடிப்பட்டு இருவருமே உயிரிழந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பாலமுரளியின் மனைவி, ‘’நான் எப்படி நீங்க இல்லாம வீட்டுக்குப் போவேன்’’ என்று கதறியது காண்பவர்களைக் கலங்க வைத்தது. இருவரின் பிணத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறை வழிக்குப்பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.