சொத்துக்காகத் தன்னை கடத்தித் துன்புறுத்தியதாக மகள்மீது தந்தை போலீசில் பரபரப்பு புகார்

எஃப்.எம். ரேடியோ ஒன்றில் ஆர்.ஜே.வாக சேலத்தில் பணி புரிந்து வரும் தன் மகள் மீது அவரது தந்தையே காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
மீடியா துறையில் பணிபுரியும் மகள், தந்தை
மீடியா துறையில் பணிபுரியும் மகள், தந்தை

சேலம் மாநகர் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சந்திரா என்ற மனைவியும் பிரேமா, மலர்விழி, நந்தினி என்று மூன்று மகள்களும் உள்ளனர். இதில் மலர்விழி என்ற பெண் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மலர்விழியை, அவரது தாயார் சந்திரா சகோதரிகள் பிரேமா, நந்தினி ஆகியோர் குடும்பத்தில் சேர்க்கக் கூடாது எனக் கூறி ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால் தன் காதல் கணவருடன் சேர்ந்து மலர்விழி டெல்லியில் வசித்து வருகிறார். இந்நிலையில் நாராயணன் தன் பெற்ற மகள் பிரிந்து சென்றதை ஏற்க முடியாமல் தொடர்ந்து மலர்விழியுடன் அவ்வப்போது செல்போனில் தொடர்பு கொண்டு தன் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் பேசிவந்துள்ளார். இதனிடையே கடந்த மாதம் நாராயணன் மலர்விழியுடன் பேசிக்கொண்டு இருப்பதை எஃப்.எம். ரேடியோ ஒன்றில் ஆர்.ஜே.வாக சேலத்தில் பணி புரிந்து வரும் அவரின் மற்றொரு மகள் நந்தினி பார்த்துள்ளார்.

இதுகுறித்து நந்தினி தன் தாய் சந்திரா மற்றும் சகோதரி பிரேமாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் அவ்வப்போது வந்துள்ளன. இவ்வளவு நடந்தும் நாராயணன் தன் மகள் மலர்விழியை விட்டுக் கொடுத்து பேசவில்லை. குடும்ப நண்பர்களிடம் மூலமும் இதுகுறித்து வீட்டிலேயே நடந்த பஞ்சாயத்தும் எடுபடவில்லை.

காதலித்து திருமணம் செய்து கொண்ட மலர்விழி
காதலித்து திருமணம் செய்து கொண்ட மலர்விழி

நாள்பட பிரச்சனை பெரிதாகவே நாராயணன் கடந்த மாதம் டெல்லிக்குச் சென்று தன் மகள் மலர்விழியை பார்த்து அங்கேயே ஐந்து நாட்கள் தங்கியுள்ளார். முன்பே நாராயணன் மூன்று வீடுகளை அவர் மனைவி சந்திரா பேரில் பத்திரப்பதிவு செய்து வைத்திருந்த நிலையில், அவருக்கே தெரியாமல் அந்த வீடுகளை இரண்டு மகள்கள் பெயரிலும் மாற்றி பத்திரப்பதிவு நடந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் டெல்லியில் இருந்து சேலம் திரும்பிய தனது தந்தை நாராயணனை இளைய மகள் நந்தினி தன் நண்பர்களை வைத்து கடத்தி தனியார் தனியார் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் கடந்த 13 நாட்களாக வைத்து கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

டெல்லியில் இருந்து சேலம் சென்று பல நாட்களாகியும் தன் தந்தை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் மலர்விழி, அவருக்குத் தெரிந்த நண்பர்கள் மூலம் இதுகுறித்து விசாரித்தபோது நாராயணன் இன்னும் சேலமே வரவில்லை என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், மலர்விழி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

நாராயணன் மனைவி சந்திரா, மகள் பிரேமா
நாராயணன் மனைவி சந்திரா, மகள் பிரேமா

இதனை அடுத்து நாராயணன் சேலம் அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை பள்ளப்பட்டி போலீசார் மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதனை தொடர்ந்து தன் உயிருக்கு பாதுகாப்புக்கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்த நாராயணன், தன்னை மறுவாழ்வு மையத்தில் வைத்து துன்புறுத்தியதாகவும் தாக்கியதாகவும் குறிப்பாக முறையாக உணவு வழங்காமலும் இருட்டு அறையில் அடைத்து ஏதேதோ மாத்திரைகளை கொடுத்து மயக்க நிலையை ஏற்படுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தன்னிடம் சொத்துக்களை எழுதி வாங்கி கொண்டதாகவும் கூறியுள்ளார். தன்னை காரில் அழைத்துச் சென்ற தனியார் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தை சேர்ந்த தீபக் என்பவரிடம் பணம் கொடுத்து தனது மனைவி மற்றும் மகள்கள் தன்னை அங்கு அடைத்து வைத்திருந்ததாகவும் தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் நாராயணன் தெரிவித்தார்.

சகோதரி பிரேமாவுடன் நந்தினி
சகோதரி பிரேமாவுடன் நந்தினி

எனவே தனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று அந்த தனியார் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் அனைவருக்கும் மாத்திரைகள் கொடுத்து கொடுமைப்படுத்துவதாகவும், இந்த மீட்பு மையம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

"குடும்ப பிரச்னை காரணமாகவே அவரை கண்டித்ததாகவும் அவ்வப்போது குடிபோதையில் வந்து தங்களை தொந்தரவு செய்ததால், உறவினர் மூலமாக தான் தந்தையை மறுவாழ்வு மையத்தில் சேர்த்ததாக இளைய மகள் நந்தினி தரப்பில் இருந்து சொல்லப்பட்டது

இது தொடர்பாக போலீசார், "நாரயணனுக்கு குடி பழக்கம் இருப்பதாக சொல்லித்தான் நந்தினி தனது நண்பர்கள் மூலம் அவரை அரிசிபாளையம் போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளார். அந்த மையத்தில் தான் கொடுமைப்படுத்தப்பட்டதாக நாரயணன் தெரிவித்துள்ளதை நீதிமன்றமும் விசாரிக்க சொல்லியுள்ளது. இத்தனை சிக்கல்களுக்கும் மூலக்காரணம் குடும்ப சொத்து தகராறுதான் . இதில் மேலும் கூடுதல் விசாரணை நடத்தி வருகிறோம்" என்கின்றனர்.

சேலம் நியூ கேர் லைப் போதைமீட்பு மறுவாழ்வு மையத்தின் உரிமையாளர் தீபக், "நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாரயணன் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்தான் என்பதற்கான சான்றிதழ் உள்ளது. தனது சொத்து பிரச்னையில் நந்தினியின் தந்தை எங்களது பெயரை தவறாக பயன்படுகிறார். நாங்கள் இதற்காக நீதிமன்றத்தை நாடுவதற்கு வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம். எங்களை பற்றி தவறாக எதுவும் செய்திகளை பரப்பிவிட வேண்டாம்" என்று இதுபற்றித் தெரிவித்தார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com