கரூர் மாவட்டம், பரமத்தி பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்பகுதியில் உயர் மின்கோபுரம் அமைக்க விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய சங்க நிர்வாகிகள் ஈசன் தலைமையில் புகழூர் தாலூகா அலுவலகத்திற்குள் சென்று உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார்கள். உடனே அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றார்கள்.
இந்நிலையில் தென்னிலை அருகே கூனம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ராஜா தனி ஆளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதனால் பரபரப்பு நிலவுவதால் என்ன செய்வதென புரியாமல் மாவட்ட நிர்வாகம் திகைத்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ராஜா கூறும்போது, ‘விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து வந்த நிலையில் இதை செயல்படுத்த மின் வாரியம் பணிகளை செய்ய ஆரம்பித்துவிட்டது. இதை அகிம்சை வழியில் எதிர்க்க தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். இனியும் இதை விடமாட்டோம்’ என்றார்.
- அரவிந்த்