நெல்லை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜீன்- 1ம் தேதி பிசான பருவத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு பருவமழை பொய்த்து அணை வறண்டு விட்டதால் தண்ணீர் திறக்கப்படவில்லை. என்றாலும் தாமிரபரணிக் கரையோர விவசாயிகள் பிசான பருவ சாகுபடியைத் தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில் நெல்லையில் தற்போது தென்கிழக்குப் பருவ மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. இதனால், அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 71 அடியாய் உயர்ந்ததை தொடர்ந்து விவசாயிகள் நெல் சாகுபடிக்காக அணையைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால், அணை திறக்கப்படவில்லை. எனவே கடந்த 14ம் தேதி அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறிது விவசாயி மணி கூறுகையில், ''நாங்கள் அனைவரும் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் பாசன விவசாயிகள். தற்போது நெல் சாகுபடி செய்து விட்டோம். ஆனால், தண்ணீர் இல்லை. வழக்கமாக ஜீன் -1ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். அணையில் 40 அடி தண்ணீர் இருக்கும்போது கூட பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது 71 அடி தண்ணீர் இருக்கிறது. எனவே உடனடியாகத் தண்ணீர் திறக்கப்பட வேண்டும். எங்கள் கால்நடைகளுக்குக் கூட குடிநீர் இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே தண்ணீர் திறக்கப்படா விட்டால் ஊரைக் காலி செய்து விடவேண்டியதுதான்’’என்றார்.
விவசாயிகளின் முற்றுகையைத் தொடர்ந்து ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இது குறித்து தாசில்தார் சுமதி கூறுகையில், ’’விவசாயிகளின் போராட்டத்தைத் தொடர்ந்து உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். பாபநாசம் அணை விரைவில் திறக்கப்படும் என்று உறுதியளித்து இருக்கிறார்கள். எனவே விவசாயிகளின் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்’’ என்றார்.