செலவு செய்த விலைக்கூட கிடைக்கவில்லை என்ற வேதனையில் திருச்சியில் வெண்டைக்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி விவசாயிகள் இன்று 39-வது நாளாக சத்திரம் பேருந்து நிலையம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் போலீஸாருக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தவாறே போராட்டத்தின் வடிவம் மாறிக்கொண்டே இருக்கிறது.
அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் இறங்கி போராட்டம், சுதந்திர தினத்தன்று கருப்புத்துணியால் முக்காடு போட்டு போராட்டம், எலும்புக்கூடுகளை வைத்தும், எலிகளை கடித்தவாறு அமர்ந்தும், பாதி நிர்வாணத்தில், பாதி மொட்டை அடித்தும் தொடர் போராட்டத்தை இன்று வரை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
இன்று சற்று வித்தியாசமாக திருச்சி அண்ணாசிலையில் வெண்டைக்காய் மாலை அணிந்து "வெண்டைக்காய்க்கு உரிய விலை வழங்கு, வழக்கு எங்களை காப்பத்து, காப்பத்து" என்றுகூறியவர்கள், 500 கிலோக்கு மேல் உள்ள வெண்டைக்காய்களை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து பொதுமக்களுக்கு வெண்டக்காய் கொடுக்க திட்டமிட்ட போது அந்தப்பகுதியில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் "வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ வெண்டைக்காய் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கின்றனர். விளைவித்த வெண்டக்காய்க்குரிய செலவுக்குகூட இன்று வெண்டைக்காயின் விலை இல்லை. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்" என்றனர்.
அதேநேரம், அண்ணாசிலையில் மாலையிடச்சென்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தியதாலும், ஒரு கட்டத்தில் வெண்டைக்காயை சாலையில் கொட்டி விவசாயிகள் சாலையில் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதாலும் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது..
இதனால் காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சுமார் 500 கிலோ வெண்டைக்காய்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்ததால், போக்குவரத்தில் கடும் சிரமம் ஏற்பட்டது. பொதுமக்களில் பலர் வெண்டைக்காய்களை திரட்டினர், போலீஸாரோ வெண்டைக்காய்களை அகற்றினர். இதனால் அப்பகுதியில் வெண்டைக்காய் மழை பொழிந்ததுபோல் காட்சியளித்தது.
விவசாயிகளின் இந்தப்போராட்டத்தால் நீண்ட நேரமாக போக்குவரத்தில் குளறுபடி ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் ஆர்.நிவேதா லட்சுமி தலைமையில் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் வழக்கம்போல் விவசாயிகளின் போராட்டமும் தொடர்ந்து நடைபெற்றது.
- ஷானு