நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் பணி நியமனத்திற்கு ரூ.3 லட்சம் வரை பேரம்- விவசாயிகள் ஆட்சியரிடம் புகார்
நெல்கொள்முதல் நிலைய எழுத்தர் பணி நியமனத்திற்கு ரூ.2 முதல் ரூ.3 இலட்சம் வரை பேரம் எனவும், ஊழல் புகார்கள் மீது நடவடிக்கை இல்லை எனவும் விவசாய சங்கத்தினர் நாகை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
நாகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த விவசாயிகள், வேளாண் காப்பீடு, நிவாரணம் ஆகியவற்றில் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வம் தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை பொதுச்செயலாலர் ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் கமல்ராம் ஆகியோர் முன்னிலையில் கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் குறைதீர் கூட்டத்திற்கு சென்றவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து அவர்கள் “சமீபத்தில் நாகை வந்து இரு தினங்கள் தங்கிய முதல்வர் தண்ணீரின்றி கருகிவரும் குறுவைப்பயிரை பார்வையிடவில்லை. 30 ஆயிரம் ஏக்கரில் குறுவைப்பயிர் பாதிக்கப்பட்டுள்ளதை வேளாண்துறையினரும் கணக்கெடுப்பு நடத்தவில்லை. 2022-23ம் ஆண்டுக்கான உளுந்து, பயிறு, எள், நெல் ஆகியவற்றிற்கான சாகுபடி காப்பீடு, நிவாரணம் வழங்கவில்லை. கீழ்வேளூர், கூத்தூர் வேளாண் வங்கிகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றி விரிவான விசாரணை செய்யப்படவேண்டும். வேளாண் அறிவியல் நிலையம், உற்பத்தியாளர் நிறுவனங்களில் நிலவும் லஞ்சப்புகார்களுக்கு நடவடிக்கை என்பதே இல்லை.
பாசனதாரர் சங்க செக் மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். நாகை நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் கடந்தாண்டு ரூ.37 இலட்சம் ஊழல் நடந்துள்ளது. இந்தாண்டு நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் பணிக்கான நியமனத்திற்கு ரூ.2 இலட்சம் முதல் ரூ.3 இலட்சம் வரை பேரம் பேசப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால்தான் ஆர்ப்பாட்டம், வெளிநடப்பு செய்து எங்களின் எதிர்ப்பை தெரிவித்தோம்.” என்றனர் ஆக்ரோஷமாக. விவசாயிகளின் இந்த போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் விவசாயிகளின் புகார்கள் தொடர்பாக உடனடியாக விசாரிக்க உத்திரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்