தூத்துக்குடி மாவட்ட நீர்வளத்துறையின் சார்பில் தாமிரபரணி வடிநிலக்கோட்டத்தின் மூலம் ரூ.12 கோடி செலவில் கோரம்பள்ளம் குளத்தில் 3 பகுதியாக திட்டமிடப்பட்டு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தப்பணியை தொடங்கி வைத்தார் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ். அதனை தொடர்ந்து, விவசாயிகளின் ஆலோசனைப்படி, குளத்தில் பொக்லைன்கள் மூலம் மண் அள்ளப்பட்டு, நல்லமலையை ஒட்டியுள்ள குளத்தின் மேற்கு எல்லையில் வெள்ளம் ஏறாத பகுதிக்கு கொண்டு சென்று குவிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (நேற்று முன்தினம்)பெய்த பலத்த மழையால், குளத்தின் உட்பகுதியில் பல இடங்களில் மழைநீர் தேங்கியது. பிற பகுதிகள் சகதியாக மாறின. இதனால், தூர்வாரும் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு அவசர அவசரமாக லாரிகளும், பொக்லைன்களும் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டன.
3-வது நாளாக இன்றும் குளத்தில் தண்ணீர் உள்ளதால் சுற்றியுள்ள பகுதிகள் சேரும்,சகதியுமாக இருப்பதால் பணிகள் ஏதும் நடைபெறாமல், பொக்லைன்கள் அனைத்தும் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனால், கோரம்பள்ளம் குளத்தை சார்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளர்.
குளத்தை தூர் வாரும் பணி தாமதமாக தொடங்கப்பட்டதே இதற்கெல்லாம் காரணம். இதனால் வடகிழக்கு பருவமழைக்கும் முன்பே தூர்வாரும் பணிகள் முழுமையாக நடைபெறுமா? என்று விவசாயிகள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.