கரூர் மாவட்டத்தில், கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் ஜெயபாலன் கரூர் மாவட்ட குவாரிகளை நேரில் ஆய்வு செய்தார். ஆனால், இந்த ஆய்வு பெயரளவுக்கு மட்டுமே நடைபெற்றதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கரூர் மாவட்டம் பரமத்தி பகுதியில் 50 -க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் அதிக அளவில் கல் குவாரி இருக்கும் பகுதியில் கரூர் மாவட்டமும் ஒன்று.
இங்குள்ள குவாரிகளில் ஜல்லி மற்றும் எம்.சாண்டு தயாரித்து கோவை, திருப்பூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது. பல அரசியல்வாதிகள் இங்கு குவாரி வைத்திருக்கிறார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கு உள்ள குவாரிகளில் பல குவாரி லைசன்ஸ் காலாவதியாகியும் இயங்குகிறது என்று சமூக ஆர்வலர் ஜெகதீசன் உயரதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார். இதனால், கொதிப்படைந்த குவாரி அதிபர் ஒருவர் சமூக ஆர்வலரை லாரியை ஏற்றி கொலை செய்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து குவாரிகளில் எப்படி எல்லாம் விதிமுறைகள் மீறி இயற்கை வளங்களை கொள்ள அடிக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமானது.
விதி முறைகள் மீறிய குவாரிகள் மீது நடவடிக்கை இருக்கும் என்று கூறி வந்த நிலையில் நாளடைவில் நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில், கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் ஜெயபாலன் கரூர் மாவட்ட குவாரிகளை நேரில் ஆய்வு செய்தார். 'அரசு விதிகளுக்கு மீறி ஆழமாக தோண்டுகிறார்கள் வெடி மருந்து அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்கிற புகாரின் பேரில் இயக்குனர் ஆய்வுக்கு வந்துள்ளார்' என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இயக்குநர் குவாரியை ஆய்வு செய்த பின்னர், 'அதிகாரி ஆய்வுக்கு மட்டுமே வந்தார்' என்ற செய்தி குறிப்பை மட்டுமே கனிமவள அதிகாரிகள் வெளியிட்டனர்.
விதி மீறல்கள் இல்லாத குவாரிகளே இல்லை என்கிற நிலை இருக்கும்போது எந்த குவாரி மீதும் நடவடிக்கை இல்லை என்கிற போது அதிகாரி ஆய்வு கண்துடைப்பா என்று கொதிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
- கரூர் அரவிந்த்