கும்பகோணம் அருகே வணிகவரித்துறை அதிகாரி என்று தன்னைச் சொல்லிக் கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபட்ட ஒப்பந்த ஓட்டுநர் ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து போலி அடையாள அட்டை, டி.வி உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 6 எல்.இ.டி., டி.வி., 200 ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வந்த வடமாநில வாகனத்தை வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் வழிமறித்து சோதனை செய்துள்ளார். அப்போது வாகனத்தை ஓட்டி வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுனில் குமார் யாதேவ் என்பவர் தான் ஏற்றி வந்த பொருட்களுக்கு உரிய ஆவணங்களை இருப்பதாக கூறி அவற்றை அதிகாரியிடம் காட்டியுள்ளார்.
அப்போது, அந்த அதிகாரி 100 ஹோம் தியேட்டர் ஸ்பீக்கருக்கான பில் தொகையைக் குறைத்து போட்டு ஜி.எஸ்.டி., முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 40 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் ஓட்டுநர் சுனில் குமார் யாதேவிடம் கேட்டுள்ளார். ஆனால், ஓட்டுநர் தான் நேரில் அலுவலகம் வந்து முறையாக விளக்கம் அளித்துவிட்டு, பணத்தை செலுத்துவதாக கூறியுள்ளார். இதனை மறுத்த அந்த அதிகாரி ஆறு எல்.இ.டி., டி.வியை எடுத்துக்கொண்டு, நேரில் வந்து பணத்தை செலுத்தி விட்டு அந்தப் பொருள்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறி, அங்கிருந்து கிளம்பி விட்டார்.
இதனால் சந்தேகமடைந்த ஓட்டுநர் சுனில்குமார் யாதேவ், கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில், நேற்றிரவு நீீலத்தநல்லூர் பகுதியில், வாகனங்களை மறித்து வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் சோதனை செய்து கொண்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிகாரியை சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது அதிர்ச்சியடையும்படியான தகவல்கள் வெளியாகின. விசாரணையில், அவர் வணிக வரித்துறை அதிகாரி அல்ல என்பதும் கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் பகுதியை சேர்ந்த சுதாகர் (53) அவர் என்பதும் வணிகவரித்துறையில் ஒப்பந்த அடிப்படையில், கார் டிரைவராக பணியாற்றியவர் என்பதும் தெரிய வந்தது.
கடந்த ஜூலை மாதம் காரை விபத்து ஏற்படுத்தியதால், சுதாகர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. டிரைவர் வேலை போனால் என்ன, அதிகாரியாக மாறி வருமானம் ஈட்டலாம் என்று முடிவு செய்த சுதாகர், மயிலாடுதுறை வணிகவரித்துறை அலுவலகத்தில் துணை வணிகவரித்துறை அலுவலராக பணியாற்றி வருவதாக கூறி, தனது புகைப்படம் ஒட்டிய ஐ.டி., கார்டு ஒன்றை போலியாக தயார் செய்துள்ளார்.
மேலும், கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வணிக வரித்துறை என காரில் எழுதிக்கொண்டு பல்வேறு வணிக நிறுவனங்களிலும், வெளி மாநிலங்களில் இருந்து பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களில் மறித்து நிறுத்தி வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்ததுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவர் பயன்படுத்திய போலி அடையாள அட்டை, ஆறு எல்.இ.டி., டிவிகளை பறிமுதல் செய்தனர்.