தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையின் ஊட்டச்சத்து மருந்து குப்பைக்கு வந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சேகர் காலனி குடியிருப்புப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்குவதற்காக தமிழ்நாடு அரசால் விநியோகிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து டானிக் பாட்டில்கள் கொட்டப்பட்டுக் கிடந்தன.
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரப்படும் அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற பெயருடைய இவை கடந்த மாதம் ஆகஸ்ட் 2023ல் காலாவதியானவை.
ஒரு மருத்துவமனையில் குறிப்பிட்ட மருந்து தேவைக்கும் அதிகமாக இருப்பு இருந்தால் அதனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட வேண்டும் அல்லது தமிழ்நாடு மெடிக்கல் சப்ளை மருந்து கிடங்குக்கு இதுகுறித்துத் தகவல் சொல்ல வேண்டும். காலாவதி ஆகும் வரை ஒரு மருந்தை மருத்துவமனையில் வைத்திருக்கக் கூடாது என அறிவுறுத்தல் உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த அறிவுரையெல்லாம் ஏற்கப்படாமல் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தேவைக்கு அதிகமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி டானிக்குகள் மக்கள் பயன்பாட்டுக்குச் செல்லாமலேயே காலாவதி ஆகி உள்ளன.
இதனை காலாவதி ஆகும் வரை நோயாளிகளுக்கு வழங்காமல் ஏன் வைத்து இருந்தார்கள்? பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் குப்பைத் தொட்டியில் கொட்டியது யார் என்ற கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை யும்எழுந்துள்ளது.