குமரி மாவட்டம் முழகுமூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின் ராஜ் (33), இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2018ம் ஆண்டு ஒழுங்கீனமாக செயல்பட்ட குற்றத்திற்காக பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து ஊருக்கு வந்த மெர்லின்ராஜ் கேரள மாநிலம் கொல்லம், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு செயின் பறிப்பு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
போலீசாரிடம் மாட்டும் போது தான் ராணுவத்தில் பணியாற்றும் போது பயன்படுத்திய அடையாள அட்டையை காண்பித்து தப்பித்து வந்துள்ளார். இதற்கிடையே குமரி மாவட்டத்தில் ஒரு கொலை வழக்கு, மற்றொரு கொலை முயற்சி வழக்கும் பதிவாகியுள்ளது.
ஜெயிலுக்கு சென்று திரும்பி வந்த இவர், மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரையும் கூட்டு சேர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கேரளாவிலும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் தமிழக கேரள எல்லை பகுதியான விளிஞ்ஞம் பகுதியில் வைத்து சாலையில் நடந்து சென்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலிச் சங்கிலியை பறித்து செல்ல முயன்ற போது செயின்பறிப்புக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து விளிஞ்ஞம் போலீசார் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் கொண்டு வைத்திருந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் காவல் நிலையத்திற்குள் புகுந்த மெர்லின் ராஜ் அங்கு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று திக்குறிச்சி பாலத்தின் சந்தேகத்திற்கிடமான முறையில் சொகுசு கார் ஒன்று அதிக நேரம் நின்றுள்ளது இதனை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று வாகனத்தை திறந்து பார்த்தபோது அதனிள் போலீசார் தேடி வந்த மெர்லின்ராஜ் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோர் இருப்பதை பார்த்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதன் பிறகு வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது அதனுள் சுமார் 20 சவரன் தங்க தாலி சங்கிலிகள் இருந்தது தெரியவந்தது. இதற்கிடையே அவர்கள் செயின் பறிப்புக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் தமிழகம் மற்றும் கோரளாவில் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் 24-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவர, போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.