தமிழ்நாட்டில் எரிஸ் வகை வைரஸ் பரவவில்லை- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எல்லா ஆஸ்பத்திரிகளிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

’ தமிழகத்தில் எரிஸ் வைரஸ் பரவவில்லை. தமிழகத்திற்கும் அந்த வைரஸ் வராது’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை வருகை தந்த தமிழக மருத்துவத்துறை அமைச்சர் சுப்ரமணியன் ‘புதிய வகை கொரோனா (எரிஸ்) வைரஸ் தமிழகத்தில் பரவவில்லை. தமிழகத்திற்கும் அந்த வைரஸ் வராது’ என ஆரூடம் கூறியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியதுடன், கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் நேரங்களில் மட்டுமே மருத்துவர்கள் இருப்பார்கள் என்று கூறியது மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசிய குடற்புழு நீக்க நாளான நேற்று 1 முதல் 19 வயதுடையவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை மயிலாடுதுறையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கிவைத்ததோடு, கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்

தொடர்ந்து மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் ரூ.7.18 கோடியில் புதிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் நிறுவப்பட்டதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

பின்னர் நிருபர்களிடம் பேசும்போது, “ஸ்கேன் எடுப்பதற்கு மிகக்குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டிலும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 36 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. தென்காசி, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி இல்லை. மத்திய அமைச்சரை சந்தித்த போது இது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளேன். தமிழகத்திற்கு மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தால் மயிலாடுதுறை, தென்காசி மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.” என்றவர் ‘தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா (எரிஸ்) வைரஸ் தமிழகத்தில் பரவவில்லை. அதனால் யாரும் அச்சமடைய வேண்டாம். தமிழகத்தில் அந்த வைரஸ் பரவாது’ என்று ஆருடமும் கூறியது பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்தவர், “அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகல் நேரத்தில் ஒரு டாக்டர் மட்டுமே பணியில் இருப்பார். எல்லா ஆஸ்பத்திரிகளிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது” என்று கூறியிருப்பது பொதுமக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து பொதுமக்களோ “24 மணி நேரமும் டாக்டர்கள் இல்லையென்றால் ஆஸ்பத்திரியை மூடிவிடவேண்டியதுதானே. கிராம புற ஆஸ்பத்திரிகளில் இரவு நேரங்களில் டாக்டர்கள் இல்லையென்றால் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் சாக வேண்டியதுதானா?’ என்றனர் ஆக்ரோஷத்துடன்.

இதற்கு அமைச்சர் சுப்ரமணியனே, “அரசு ஆஸ்பத்திரிகளில் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1500 டாக்டர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்கள், 983 மருந்தாளுனர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புவதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 14 டாக்டர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அது முடிவுக்கு வந்தவுடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஸ்கேன் பிரிவிற்கு டாக்டர்கள், மற்றும் டெக்னீஷியன்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்.” என்று பதில் கூறினார்.

தமிழகத்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவாது என்று அமைச்சர் எந்த நம்பிக்கையில் உறுதியாகக் கூறினார்? என்றபடி மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் குருநாதன் கந்தையாவிடம் கேட்டோம். “அமைச்சர் எந்த நம்பிக்கையில் கூறினார் என்று எனக்கு தெரியாது. நான் இப்போது வெளியில் இருக்கிறேன். இது தொடர்பாக விசாரித்து பின்னர் உங்களிடம் தெரிவிக்கிறேன்.” என்றபடி எஸ்கேப்பானார்.

-ஆர்.விவேக் ஆனந்தன்

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com