ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் அண்ணன் தனபால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது,
"கொடநாடு வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரித்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவராக விசாரித்து கொண்டிருக்கிறார்கள், என்னை தற்போது வரை விசாரிக்கவில்லை என்னை விசாரிக்கும் போது முழு விபரங்களையும் நான் தெரியப்படுத்துகிறேன்.
ஜெயலலிதா காரின் ஓட்டுநர் என்னுடைய தம்பி கனகராஜ். இந்த கொடநாடு வழக்கு தொடர்பாக, முன்பே காவல் அதிகாரி சுதாகர் என்னை அழைத்து விசாரித்தார். தற்போது வழக்கு சிபிசிஐடி பக்கம் இருப்பதால், என்னை இதுவரை விசாரணைக்கு அழைக்கவில்லை. என்னை அழைக்கும் பட்சத்தில் நான் அனைத்தையும் சொல்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சாட்டியது உண்மை தான். அப்போதும் சொல்கிறேன், இப்பொழுதும் சொல்கிறேன் எடப்பாடி பழனிசாமியை தற்போது வரை தமிழக அரசு விசாரிக்கவில்லையே ஏன்? அவர் சொல்லி தான் என்னுடைய தம்பி ஆவணங்களை எல்லாவற்றையும் எடுத்து வந்ததாக என் தம்பியே என்னிடம் சொன்னார்.
என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடைபெறலாம் என்று என் தம்பி கனகராஜ் சொன்னார். அதை தொடர்ந்து ஆத்தூரில் இருக்கும் எங்கள் உறவினர் வீட்டிற்கு செல்லும் வழியில் விபத்து ஏற்பட்டு கனகராஜ் உயிரிழந்துவிட்டார். அது விபத்து அல்ல, திட்டமிட்ட சதி.
எடப்பாடி பழனிசாமி சொல்லி தான் இந்த ஆவணங்களை எல்லாம் நான் எடுத்துகொண்டு வந்தேன் என்று என் தம்பி கனகராஜ் என்னிடம் சொன்னார். இதை எங்கு வேண்டுமானாலும் வந்து சொல்கிறேன். முன்பு எனக்கு உயிர் பயம் இருந்தது ஆனால் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை உள்ளது. சிபிசிஐடி விசாரணைக்கு அழைக்கும் போது எடப்பாடி பழனிசாமி தான், ஆவணங்களை என் தம்பி கனகராஜ் மூலம் எடுத்து கொண்டு வரசொன்னார் அதற்கு சாட்சி நானே என்று சொல்லுவேன்" என பேசி முடித்தார்.