சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தன்னுடைய கணவரை சட்டவிரோதமாக அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவில், தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதேசமயம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், அமலாக்கத்துறை காவலில் வைத்து 8 நாட்கள் விசாரிக்க அனுமதி கொடுத்தும் ஜூன் 16ம் தேதி உத்தரவிட்டார். அதில், கடுமையாக முறையில் மூன்றாம் தர விசாரணைகள் கூடாது.
மருத்துவர்கள் அனுமதியுடன் விசாரணை செய்ய வேண்டும். அனுமதிக்காத நிலையில் விசாரணை கூடாது. விசாரணையின்போது போதுமான இடைவெளிகள் வழங்க வேண்டும்.
அமலாக்கத்துறை மருத்துவர்களை கொண்டு பரிசோதனையும் செய்யலாம். விசாரணைக்கு பின் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்தது. பின்னர் மீண்டும் ஜூன் 23ம் தேதி காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவின்படி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறை சார்பில் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தியதாக எந்த தகவலும் வரவில்லை.
இந்நிலையில் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தற்போதைய நிலையில் விசாரணை நடத்தினால் அவருக்கு தொந்தரவாக அமையும் என்றும், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் காவிரி மருத்துவக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது விசாரணை நடத்தப்படவில்லை என்றால், நீதிமன்றத்தில் மீண்டும் காவல்துறை விசாரணைக்கு அனுமதி வாங்கப்பட்டு மீண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.