‘பொன்னியின் செல்வன்’ நாவலை தமிழில் 2 பாகம் கொண்ட திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் எடுத்திருந்தார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் உள்பட பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தின் 2 பாகங்களும் சூப்பர் ஹிட்டானது.
கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான ‘பொன்னியின் செல்வன் 2ம் பாகம்’ உலக அளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனது கனவு படத்துக்குத் தோள் கொடுத்த அனைவருக்கும் இயக்குநர் மணிரத்னம் சமீபத்தில் விருந்து கொடுத்து கவுரவித்தார்.
சென்னை கிண்டி, ரேஸ்கோர்ஸில் நடந்த விருந்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.
பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய இரண்டையுமே லைகா நிறுவனம் தயாரித்து இருந்தது. தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்- 2 ஆகிய படங்களையும் லைகா நிறுவனம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் லைகா நிறுவனம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின்பேரில் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னை, தியாகராய நகரில் உள்ள லைகா தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் காலை முதல் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேப்போல் அடையாறு, காரப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் காலை 8 மணி முதல் துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.