ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி என்கவுண்டர் விவகாரத்தில் ரவுடிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என காஞ்சிபுரத்தில் தமிழக ஏடிஜிபி அருண் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம்,ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிளாய் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி குல்லா என்கிற விஷ்வா( 35)மீது ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் செங்கல்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை,ஆள் கடத்தல்,கொலை முயற்சி,கஞ்சா கடத்தல் உட்பட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அப்பள ராஜா உள்ளிட்ட ரவுடிகளுடன் ஸ்ரீபெரும்புதூரில் அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.இது தொடர்பான தகவல் போலீசாருக்கு சென்றதையடுத்து படப்பை அருகே பதுங்கி இருந்தவர்களை கைது செய்து தனிப்படை போலீசார் சிறையில் அடைத்தனர்.
பின்னர் பிணையில் வெளிவந்த விஷ்வா கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் சுங்குவார்சத்திரம் அருகே சோகண்டி பகுதியில் விஷ்வா தலைமறைவாக இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. பின்னர் அங்கு விரைந்த போலீசார் விஷ்வாவை மடக்கி பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது கையில் இருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மூலம் தலைமை காவலர்கள் வாசுதேவன்,ராஜேஷ் ஆகியோரை சரமாரியாக தாக்கி விட்டு,தப்பி செல்ல முற்பட்டப்போது போலீசார் தற்காப்பிற்காக விஷ்வாவின் நெஞ்சில் துப்பாக்கி மூலம் சுட்டுள்ளனர்.
போலீசார் நடத்திய இந்த துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த பிரபல ரவுடி விஷ்வா நிகழ்வு இடத்திலேயே உயிர் இழந்தார்.இதனை அடுத்து ரவுடி விஷ்வாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் ரவுடி விஷ்வா தாக்கியதில் தலைமை காவலர்கள் ராஜேஷ் மற்றும் வாசுதேவன் ஆகிய இருவரது கைகளிலும் காயம் ஏற்பட்டு இருவரும் காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் அவர்களை தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஏடிஜிபி அருண் கூறுகையில்,காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் நிரம்பி இருக்கின்றன.இதில் தொழில் போட்டி காரணமாக ரவுடிகள் பெருகி வருகின்றனர். இவர்களை ஒடுக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு என்ன காரணத்தால் இவர்கள் இச்செயலில் ஈடுபடுகிறார்கள்.இவர்களை ஒடுக்க என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன குறித்தும் விரிவாக ஆலோசித்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறோம்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராஜேஷ் ,வாசுதேவன் ஆகிய இரு தலைமை காவலர்களையும் மருத்துவமனையில் சந்தித்து உடல்நலம் விசாரித்ததுடன் ஆறுதலும் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் சரக டிஜஜி பொன்னி,எஸ்.பி. டாக்டர் எம்.சுதாகர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் ஆலைகளில் இருந்து ஸ்கிராப் எனப்படும் கழிவு பொருட்களை ஒப்பந்தம் எடுப்பதில் தொழில் போட்டு ஏற்பட்டு முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சரித்திர பதிவேடு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது பிரபல ரவுடிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.