தேன்கனிக்கோட்டை அருகே கிராம பகுதியில் சுற்றித்திரிந்த 5 யானைகள் வனத்துறை மற்றும் கிராம மக்கள் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த நொகனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 யானைகள் தாவரகரை, கண்டகானப்பள்ளி, கெண்டகானப்பள்ளி மற்றும் கேரட்டி ஆகிய கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்து தொடர்ந்து ராகி, தக்காளி, முட்டைகோஸ், தென்னை, மா உள்ளிட்ட விவசாய விளை பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதையடுத்து, யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். வனச்சரகர் முருகேசன் தலைமையில், வனத்துறை மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், கிராம பகுதிகளில் சுற்றித் திரிந்த 5 யானைகள வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளை மேற்கொண்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பின், 5 யானைகள் தாவரக்கரை பகுதியில் சுற்றித்திரிந்த யானைகளை, பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பியும் நீண்ட போராட்டத்திற்கு பிறகு நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. இதனால் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
மீண்டும் யானைகள் கிராம பகுதிக்கு வராதவாறு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையத்து வனத்துறையினர் அங்கு முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-பொய்கை கோ.கிருஷ்ணா