மின் வாரியத் துறை அலட்சியத்தால் வீட்டிற்கு வெளியே அறுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த கலகம் ஊராட்சிக்கு உட்பட்ட மிதியக்குடிக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் உடையப்பன் (70), இவரது மனைவி சம்பூரணம் (62) இவர்களுக்குக் குழந்தைகள் இல்லாத நிலையில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து உறவினர்கள் அரவணைப்பில், குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், பேராவூரணி சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை கொட்டியது. அப்போது வீட்டு வாசலில் அவ்வழியாகச் சென்ற மின் கம்பி நேற்று இரவு திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதனை அறியாத உடையப்பன் மறு நாள் அதிகாலை 3 மணிக்கு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது இருளில் அறுந்து கிடந்த மின் கம்பியைக் கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அந்த இடத்திலேயே உடையப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். உடையப்பனின் அலறல் சத்தம் கேட்டு அவரைத் தூக்குவதற்காக வந்த அவரது மனைவி சம்பூரணமும் மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக ஊயிரிழந்தார். இருவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது மின்கம்பி அறுந்து கிடந்தது தெரிய வந்தது.
அந்தக் கிராம மக்கள் உடனடியாகச் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு மின் இணைப்பையும் துண்டித்தனர். இதனைத் தொடர்ந்து பேராவூரணி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடையப்பன் அவரது மனைவி சம்பூரணத்தின் சடலத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த காந்தி என்கிற பெண்மணி கூறுகையில், ‘’மிதியக்குடிக்காடு கிராமம் முழுவதும் மின் கம்பிகள் பழுதடைந்து எந்த நேரமும் அறுந்து விழும் நிலையில் உள்ளது. மின்கம்பிகள் தாழ்வாகச் செல்கின்றன. குழந்தைகளை வைத்துக் கொண்டு ஆபத்தான நிலையில் உயிர் வாழ்கிறோம். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை’’ எனக் குற்றம்சாட்டுகிறார்.
உடனடியாக மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பிகளைச் சரி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ‘அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’எனக் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மின்வாரியத்துறை அறுந்து விழுந்த மின் கம்பியைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-மேனகா அஜய்