திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், கல்லக்குடி மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருபவர் ஸ்ரீதர். இவரிடம் சென்ற அப்பகுதி மக்கள் ‘கல்லக்குடி புதிய சமத்துவபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு மின் இணைப்பு வழங்குங்கள்’ என கேட்டுள்ளனர்.
அதற்கு இளநிலை பொறியாளர், ‘எல்லாம் ஆன்லைனில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று கலெக்டரின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்து கையெழுத்து வாங்கிட்டு வாருங்கள். மின் இணைப்பு தருகிறேன்’ என தரைக்குறைவாக பேசியுள்ளார்.
மீண்டும் ‘கோயிலுக்கு தானே புண்ணியமா போகும் மின் இணைப்பு கொடுங்க’ என அப்பகுதி மக்கள் கேட்டதற்கு கலெக்டரின் சட்டை பிடித்துக்கேளுங்கள்’ என்று இளநிலை பொறியாளர் ஸ்ரீதர் பதில் அளித்துள்ளார்.
அதோடு நிறுத்திக்கொள்லாமல் ‘கலெக்டர் சட்டையை பிடித்து எழுதி வாங்கி வாருங்கள். நான் அடுத்த நொடியே மின் இணைப்பு தருகிறேன். நீங்கள் வாங்கி வந்தால் உங்கள் கோயிலுக்கு நான் பணம் கட்டுகிறேன். வருமானம் முழுவதும் அவனிடம்தான் உள்ளது.
கோயிலின்பேரில் தடையில்லா சான்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தாரிடம் வாங்கி வாங்க. நான் தருகிறேன் என்றும், நீங்கள் சொல்வதை எழுதிக் கொடுக்க வேண்டும் என்றால் மாதம் எனக்கு ரூ.10 லட்சம் தருகிறீர்களா?’ என இளநிலை பொறியாளர் ஸ்ரீதர் கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் இளநிலை பொறியாளர் ஸ்ரீதர் மீது மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் கலெக்டரை தரக்குறைவாக பேசிய இளநிலை பொறியாளர் ஸ்ரீதரை பணி இடை நீக்கம் செய்து மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் பிரகாசம் உத்தரவிட்டுள்ளார்.