மின்சாரம் பாய்ந்து அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு- ஒரே குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேர்
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 பேர்

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள திண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட உடைந்தகரை கிராமத்தைச் சேர்ந்த சரோஜா(70). உடைந்தகரை பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை மழை பெய்துள்ளது. அப்போது, வீட்டின் அருகில் இருந்த கொய்யா மரத்திற்கும் கரண்ட் கம்பத்திற்கும் இடையில் துணி காயப்போடுவதற்கு கம்பி கட்டியுள்ளனர். அந்த கம்பி துருப்பிடித்து, மழைக்கு அறுந்து கீழே விழுந்துள்ளது. இன்று காலை எழுந்து பார்த்துள்ளார். கம்பி அறுந்து கீழே விழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மழையில் நனைந்த துணியையும் காயப்போட, அறுந்த கம்பியை எடுத்து கட்டி சரி செய்ய கம்பியை எடுத்துள்ளார் . உடனே, சுருண்டு விழுந்துள்ளார்.இவர், சுருண்டு விழுவதை பார்த்த சரோஜா உறவினரான மாதம்மாள், சரோஜாவை மீட்க எழுப்பி உள்ளார். அவரும் சுருண்டு விழ அம்மா சரோஜா, அத்தை மாதம்மாள் இருவரையும் மீட்க பெருமாள் சென்றுள்ளார். அவரும் சுருண்டு விழுந்துள்ளார்.மூவரும் அசைவற்று இருந்துள்ளனர். அதன் பிறகு, அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அவர்கள் மூவரும் கரண்ட் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளதை கண்டறிந்து, மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்துவிட்டு, அருகில் இருந்த மின்மாற்றியில் (Transformer) மின்சாரத்தை துண்டித்து மீட்டுள்ளனர்.

பின்னர், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் மூவரையும் மீட்டு காரிமங்கலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக மூவரது உடல்கள் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சரோஜா வீட்டிற்கு அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து கம்பி சரோஜா வீட்டு கூரை உடன் இணைத்து கட்டப்பட்டிருந்ததும் தெரு விளக்குகாக அமைக்கப்பட்ட சுவிட்ச் ஒயரிலிருந்து மின்சாரம் கம்பியின் மீது பட்டதில் கம்பியில் பாய்ந்திருந்தது. அதனைத்தொட்ட சரோஜா மீது பாய்ந்துள்ளது. அவரை காப்பாற்ற மற்ற இருவரும் முயற்சி செய்த போது மூவருக்கு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மின்சாரம் பாய்ந்து தாய், மகன், அத்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-பொய்கை கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com