குடிகார கணவனின் அடிதாளாமல் போதையில் கொலை செய்த பாட்டி!

அடி தாங்க முடியல கண்ணு, நான் என்ன மாடா மனுஷியா?
கொலை வழக்கு
கொலை வழக்கு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அண்மையில் மது போதையாலும் மதுவால் எழுந்த சண்டையாலும் ஒரே இரத்த சொந்தங்களான நான்கு பேர் துள்ளத் துடிக்க கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த அதிர்ச்சியிலிருந்து தமிழகம் மீளும் முன்னரே கோவை மாநகரத்தில் அடுத்த படுகொலை போதையால் நிகழ்ந்துள்ளது. இதில் பேரதிர்ச்சி என்னவென்றால் இதில் கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஒரு பெண் அதிலும் 70 வயதை கடந்த பாட்டி என்பதுதான்.

கோவை சிட்டி இராமநாதபுரம் சுங்கம் பகுதியை சேர்ந்த 75 வயது பெரியவர் லோகநாதன். இவரது மனைவி தெய்வானை. இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடித்துவிட்டு போதையில் இருவரும் கடுமையாக சண்டை போட்டுக் கொள்வார்களாம். அதிலும் லோகநாதன் தன் மனைவியை கண்டபடி அடிப்பாராம். கடந்த சனிக்கிழமை இரவில் அதீதமாக குடித்துவிட்டு மனைவியை அடி வெளுத்துள்ளார் அவர். தெய்வானையும் அந்த நேரத்தில் மது அருந்திவிட்டுதான் இருந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அடி தாளாத பாட்டி, அங்கே கிடந்த கட்டையை எடுத்து கணவனை விளாசிவிட்டார். லோகநாதன் காயங்களுடன் காலமாகிவிட்டார். விவகாரம் போலீஸுக்கு போக, அவர்கள் வந்து பாட்டியை கைது செய்து விசாரிக்கையில் ‘அடி தாங்க முடியல கண்ணு, நான் என்ன மாடா மனுஷியா? அவர் கிட்ட வாங்குற அடி, மிதி வலியை தாங்குறதுக்கே சாராயம் குடிச்சாதான் முடியும். அன்னைக்கு ஓவரா சாத்திட்டார் கண்ணு. அதான் கோவத்துல பக்கத்துல கிடந்த கட்டையை எடுத்து நாலு வெச்சேன், ஆனால் செத்துப் போவார்னு நினைக்கல கண்ணு” என்று கண்ணீர் வடித்துள்ளார்.

பாட்டியின் இந்த வாக்குமூலம் அவரைக் கைது செய்த போலீசார்ரையே கலங்கச் செய்துள்ளது. 20 வயதுக்கு மட்டுமல்ல 70 வயதுக்கும் குடி குடியைக் கெடுக்கும் .

-ஷக்தி

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com