புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இந்த மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா நோட்டுகள், புத்தகங்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபடியே இருந்தது.
அப்படி சேர்ந்திருந்த புத்தகங்கள் கந்தர்வக்கோட்டையில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் விற்பனை செய்யப்பட்டது என்றும், கொத்தகம் சாலையில் உள்ள அந்த பழைய இரும்பு வியாபாரி வீட்டு முன்பு பள்ளிப் புத்தகங்கள் குவிந்து கிடப்பதாக செய்திகள் வெளியானது.
இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மஞ்சுளா மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ரமேஷ் ஆகியோர் நேரடியாக பள்ளி மற்றும் பழைய இரும்புக்கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் விலையில்லா நோட்டுப்புத்தகங்கள் விற்பனை செய்யப்படவில்லை. அது கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளியில் பயின்ற 11 மற்றும் 12ம் வகுப்பை சேர்ந்த மாணவர்களின் ரெக்கார்ட் நோட்டுகள் என்பதும் தெரியவந்தது.
இவை எப்படி பழைய இரும்புக்கடைக்கு விற்கப்பட்டது? என்பதன் பின்னணி இதுதான். அதாவது இந்த பள்ளியில் செயல்பட்டு வரும் மேலாண்மைக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும் பழைய பொருட்களை விற்பனை செய்வது, அதில் இருந்து கிடைக்கும் நிதியில் பள்ளிக்கு தேவையான வசதிகள் செய்வது என்ற முடிவின்பேரில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளி மேலாண்மைக்குழு தரப்பில் 'கடந்த ஏப்ரல் மாதத்தில் இப்பள்ளியில் உள்ள பயன்படாத தளவாட பொருட்கள், பழைய ரெக்கார்ட் நோட்டுகளை விற்பனை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி விற்பனை செய்யப்பட்டதில் கிடைத்த தொகை ரூ.1.96 லட்சத்தில் பள்ளியில் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 6 வகுப்பறை கட்டிடங்களில் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. துருப்பிடித்து இருந்த 155 டெஸ்க்கிற்கு வர்ணம் பூசப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேப்போல் தண்ணீர் டேங்க்கிற்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இவை பழைய தளவாட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதில் கிடைத்த தொகையில் இருந்து செய்யப்பட்டுள்ளது. இதற்குரிய அனைத்து ஆவணங்களும் கல்வித்துறை அதிகாரிகளால் சரி பார்க்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.
- ஷானு