எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழன் பட்டத்தை நானாக வழங்கவில்லை. மக்கள் வழங்க சொன்னதால், நான் வழங்கினேன் என இந்து சமய பெரியவர் நிலையூர் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு மதுரை வலையங்குளம் பகுதியில் அ.தி.மு.க பொன்விழா ஆண்டு மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் போது அ.தி.முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ’புரட்சித் தமிழன்’ என்கிற பட்டமளிக்கப்பட்டது. இந்த பட்டத்தை மூன்று சமயங்களை சேர்ந்த சர்வ சமயப் பெரியோர்கள் வழங்கினர்.
இது தொடர்பாக இந்து சமயம் சார்பாக பட்டமளித்த நிலையூர் ஆதீனம் கூறுகையில், ”நான் 1994இல் சன்னியாசம் பெற்றேன். என்னை நிலையூர் ஆதீனம் என்று அழைப்பார்கள். என்னிடம் வரும் பக்தர்களும், பொதுமக்களும் கடந்த வாரம் அருகே நடைபெற உள்ள அ.தி.மு.க மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு பட்டமளிக்கவிக்கிறோம். அதை நான் வந்து வழங்க வேண்டும் என்று அழைத்தார்கள்.
இது கட்சி நிகழ்வு நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.கிறிஸ்தவத்தை சேர்ந்த ஒரு பாதிரியாரும், இஸ்லாமியத்தை சேர்ந்த ஒரு ஹாஜியாரும் வருவதாக சொன்னதால்தான் நானும் வந்தேன்.ஏதோ புரட்சி என்று பட்டம் சொன்னார்கள். அங்கு நேரில் வந்து தான் புரட்சித்தமிழன் என்கிற பட்டம் எனக்கு தெரியும்.
பட்டத்திற்கு ஏற்றவரா என்று நான் கூற முடியாது. ஏனென்றால் இது நான் வழங்கவில்லை. பொதுமக்களாக சேர்ந்து வழங்க விருப்பப்பட்டு அதற்கு என் மூலம் வழங்கினார்கள்.மற்ற மத குருமார்களுடன் சேர்ந்து இந்த பட்டத்தை வழங்கி விட்டு ஒரு பகவத்கீதையும் வழங்கிவிட்டு நான் வந்து விட்டேன். இதுதான் நடந்தது”என்று தெரிவித்துள்ளார்.