‘அண்ணாமலை திட்டமிட்டு பேட்டி கொடுத்துள்ளார்’ - எடப்பாடி பழனிசாமி

‘அண்ணாமலை திட்டமிட்டு பேட்டி கொடுத்துள்ளார்’ என, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை
எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்தபோது தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார்.

இதனால் அண்ணாமலைக்கு எதிராக அ.தி.மு.க-வினர் கடும் கண்டனங்களையும், தங்களது எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில் அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ‘ஜெயலலிதா ஒன்றரை கோடி தொண்டர்களின் இதயத்தில் தெய்வமாக உள்ளார்.

ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கும் விளைவிக்கும் விதமாகவும், பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு 2 நாட்களுக்கு முன்பு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பேட்டியாக கொடுத்துள்ளார்.

இது, ஜெயலலிதாவின் தொண்டர்கள் மற்றும் மக்களின் இதயத்தில் கொந்தளிப்பையும், வேதனையும் ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி ஆகியோர் ஜெயலலிதா மீது மதிப்பும், மரியாதையும் கொண்டு இருந்தனர். மேலும் ஜெயலலிதாவை அவரது இல்லத்திலே சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளனர்.

பிரதமர் மோடிகூட ஜெயலலிதாவின் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். சென்னையில் அவரது இல்லத்திலேயே சந்தித்து ஆலோசனையும் நடத்தியுள்ளார்.

பா.ஜ.க முதன்முதலில் மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு ஜெயலலிதாதான் காரணமாக இருந்தார். அப்படிப்பட்ட ஜெயலலிதாவை பொதுவெளியில் அவதூறாக பேசிய அண்ணாமலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது’ என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com