தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், இதுதொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் தமிழக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ‘நான் திருநெல்வேலி கூட்டத்தை முடித்துவிட்டு இன்று தான் சென்னை வந்தேன்.
வந்ததும் கோட்டைக்கு சென்றுவிட்டு சில முக்கிய ஆவணங்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டுள்ளேன். இந்த பரபரப்பு எல்லாம் நீங்கள் தான் காட்டுகிறீர்கள்.
நான் ஒன்றும் ஆளுநர் வீட்டுக்கு போகவில்லை. போனால் போகப் போகிறேன் என கூறிவிடுவேன். இதில் என்ன இருக்கிறது. அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாக சொல்கிறீர்கள். அதுவும் எனக்கு தெரியாது. அமைச்சரவை மாற்றமா? ‘யாமறியேன் பராபரமே’.
பொதுவாகவே நிர்வாக காரணங்களுக்காக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதேபோல் ஏதேனும் நடக்கிறதா? என தெரியவில்லை. முதலமைச்சர் தன் கீழ் பணியாற்றுபவர்களை மாற்றலாம் அல்லது நீக்கலாம்.
ஒருவருக்கு பதில் புதியவர்களை நியமிக்கலாம். இது முதலமைச்சரின் உரிமை. அதை யாருமே கேள்வி கேட்க முடியாது. ஆனால் அது நடக்கிறதா? என்பது பற்றி, உங்களுக்கு என்ன தெரியுமோ? அதுதான் எனக்கும் தெரியும். நடக்கும்போது அனைத்தும் நடக்கும்’ என கூறினார்.