சசிகலா
சசிகலா

'குடிபோதையில் கணவன் தகராறு' - 3 வயது மகளுடன், தாய் குளத்தில் குதித்து தற்கொலை

கோபமடைந்த சசிகலா இரண்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு நாங்கள் எங்காவது போய் சாகிறோம் என்று கூறிவிட்டு நடந்து சென்றுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே குடிபோதையில் கணவன் தகராறு செய்ததால் மனைவி, மகள் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் ஊராட்சி, பள்ளத் தெருவைச் சேர்ந்தவர் துளசி (40). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (35), இவர்களுக்கு தஷ்விகா (3), மெய் எழிலன் (1) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று கீவளூர் பகுதியில் உள்ள குட்டையில் சசிகலா, தஷ்விகா இருவரும் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விசாரணை நடத்தியதில், துளசி தினமும் குடித்துவிட்டு சசிகலாவை அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளது தெரியவந்தது.

இதனால் சசிகலா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த துளசி, சசிகலாவிடம் தகராறு செய்து அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த சசிகலா இரண்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு நாங்கள் எங்காவது போய் சாகிறோம் என்று கூறிவிட்டு நடந்து சென்றுள்ளார்.

அப்போது உறவினர்கள் சசிகலாவைத் தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வேகமாகச் சென்ற சசிகலாவிடம் இருந்து மெய் எழிலனை உறவினர்கள் வாங்கிக்கொண்டனர். பின்னர் சசிகலா, தஷ்விகாவை கூட்டிக்கொண்டு அருகில் உள்ள நல்ல தண்ணீர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் திருமணம் நடந்த நான்கு வருடத்தில் மனைவி மற்றும் குழந்தை தற்கொலை செய்து கொண்ட காரணத்தினால் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com