கோவையை அதிர வைக்கும் போதை மாத்திரைகள்: போலீஸின் ஆக்‌ஷனை எதிர்பார்க்கும் பெற்றோர்

காவல்துறையினர் புயல் வேக ஆக்‌ஷனில் இறங்கி நடவடிக்கை எடுத்து, இதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பள்ளி, கல்லூரி பிள்ளைகளின் பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள்
போதைப் பொருட்கள்
போதைப் பொருட்கள்

கோவையை அதிரவைக்கும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர ஆக்‌ஷனில் இறங்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கோவை மாவட்டம் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டிய விஷயம் ஒன்று. அது, அம்மாவட்ட எஸ்.பி.யான பத்ரிநாராயணனுக்கு சுதந்திர தினத்தன்று முதல்வர் கைகளால் பதக்கம் கிடைத்தது. அதுவும் சாதாரண பதக்கமில்லை. ‘காவல் பதக்கம்’.

அதாவது, போதைப் பொருட்கள் உற்பத்தி மற்றும் கடத்தல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 6 பேருக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டது. வடசென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க், கோவை புறநகர் எஸ்.பி. பத்ரிநாராயணன், தேனி எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ், சேலம் ரயில்வே டி.எஸ்.பி. குணசேகரன், நாமக்கல் எஸ்.ஐ. முருகன், முதல் நிலை காவலர் குமார் ஆகியோர்தான் பதக்கம் பெற்றோர். 

பதக்கம் வென்ற கோவை எஸ்.பி. பத்ரிநாராயணனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. காவல்துறை உள்ளிட்ட பல துறையினரிடமிருந்தும் மற்றும் பொதுமக்களிடம் இருந்தும். அதேவேளையில் காவல்துறையினர் எவ்வளவு அதிரடியாக நடவடிக்கையில் இருந்தாலுமே  கோவை சிட்டி, புறநகர் என்று மாவட்டம் முழுக்கவே போதைப்பொருள் நடமாட்டம் பெருகியுள்ளது என்பது கவனிக்கத்தக்க வேதனை செய்திதான். 

இந்நிலையில், கோவை காந்திமாநகர் பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக சரவணம்பட்டி போலீஸுக்கு தகவல் கிடைக்க அவர்கள் ரவுண்டு கட்டி ரெய்டு செய்ததில் நிதிஷ்குமார் மற்றும் பூபதி எனும் இருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகளை கைப்பற்றிய போலீஸ், போதை மாத்திரை விற்பனையின் மூலம் அவர்கள் சம்பாதித்திருந்த பதினான்காயிரம் ரூபாயையும் கைப்பற்றினர். இதில் கோகுல் என்பவர் தப்பி ஓடிவிட, அவரை தேடிவருகின்றனர். 

கோவை முழுக்கவே கஞ்சா, கஞ்சா சாக்லேட், போதை ஸ்டாம்ப்ஸ் என்று விதம் விதமான வடிவில் போதை பொருள் நடமாட்டம் இருந்து வரும் நிலையில் இப்போது  போதைப் பொருளை மாத்திரை வடிவிலும் புழக்கத்தில் விட துவங்கியுள்ளனர். ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் பலர் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதோடு, அதை வாங்க அதிக பணம் வேண்டும் என்பதற்காக அவர்களே போதைப் பொருட்களை கல்லூரிக்குள் விற்பனை செய்யும்  பேர்வழிகளாகவும் மாறினர். இதைக் கண்டறிந்து, சிலரை கைது செய்தது சிட்டி போலீஸ். 

இந்நிலையில் இப்போது போதை மாத்திரைகள் அடுத்த பயங்கரமாக கோவையை அச்சுறுத்த துவங்கியுள்ளது. எனவே காவல்துறையினர் புயல் வேக ஆக்‌ஷனில் இறங்கி நடவடிக்கை எடுத்து, இதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பள்ளி, கல்லூரி பிள்ளைகளின் பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். 

-ஷக்தி 

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com