'ஓராண்டுக்குள் தீர்த்து கட்டுவோம்' சபதமேற்றி பழிக்கு பழி கொலை; நெல்லையில் பயங்கரம்!

நெல்லையில் பழிக்கு பழியாக டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்த கும்பல்
கொலை செய்த கும்பல்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் நடராஜன், விவசாயி. இவரது மகன் பெயர் கணேசன்(38). இவர் சென்னையில் டிரைவராய் வேலை செய்து வருகிறார். எனவே இவரது மனைவி மற்றும் குழந்தைகள் நெல்லை அருகே உள்ள தருவை கிராமத்தில் வசித்து வருகிறார்கள். கடந்த 28ம் தேதி ஒரு கொலை வழக்கு தொடர்பாக நெல்லை நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்திருந்தார் கணேசன்.

நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, சேரன்மகாதேவி சென்றிருக்கிறார். அங்கு தந்தை நடராஜனைப் பார்த்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தருவைக்கு புறப்பட்டிருக்கிறார். அவர் தருவை பச்சையாற்றுப் பாலத்தை தாண்டி சென்றபோது, சட்டென ஒரு கும்பல் கையில் நீண்ட அரிவாளுடன் வழி மறித்திருக்கிறது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த கணேசன் சுதாரித்துக் கொண்டு எழுந்து வயல் காட்டுக்குள் ஓடியிருக்கிறார்.

நெல்லை நீதிமன்றம்
நெல்லை நீதிமன்றம்

அவரை பின் தொடர்ந்து ஓட ஓட விரட்டிய அக்கும்பல் அரிவாளால் கணேசனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது கழுத்தை அறுத்து, தலையை துண்டித்து வயலுக்குள் வீசியுள்ளனர். இரண்டு கைகளையும் கூட துண்டு துண்டாய் வெட்டிப் போட்டு விட்டு நிதானமாய் நடந்து வந்து இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் அப்பக்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே எஸ்.பி சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். இது குறித்து முன்னீர் பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

சேரன்மகாதேவி
சேரன்மகாதேவி

விசாரணை அதிகாரி சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தத்திடம் பேசினோம், "சேரன்மகாதேவி சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வந்த மாரியம்மாள்(56). கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் கணேசன் தான் முதல் குற்றவாளி. மாரியம்மாள் கொலை செய்யப்பட்டவுடன் அவரைக் கொலை செய்தவர்களை ஓராண்டுக்குள் தீர்த்துக் கட்டுவொம் என்று சபதமேற்றிருந்த அவரது உறவினர்கள் தான் கணேசனை கொலை செய்திருக்கிறார்கள், விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள்" என்று கூறினார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com