திண்டிவனம்: ‘உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட தயார்’ - மருத்துவர் ராமதாஸ் பேசியதன் பின்னணி என்ன?

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ‘உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட தயார்’ என, பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ராமதாஸ்
ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இன்று நடந்தது. இக்கூட்டத்துக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டு பின் பா.ஜ.க உருவானது. அதுபோல வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டு பா.ம.க உருவானது. நாம் நாட்டுக்கு பெற்று கொடுத்ததைப்போல வேறு யாரும், எந்த கட்சியும் பெற்றுத்தரவில்லை.

பா.ம.க-வுடன் சமூக முன்னேற்ற சங்கம், பசுமைத் தாயகம் என்று 34 அமைப்புகள் இயங்கி வருகின்றன. 10.5 சதவீத இட ஒதுக்கீடுப் பெறுவதற்கு எத்தனை அவமானங்கள், போராட்டங்களை நடத்தி அரசை கெஞ்சினோம்.

இதை பெறுவதற்கு நமக்கு அதிகாரம் வேண்டும். வன்னியர் சங்க மாநாடு நடத்துவதற்கு அனுமதி கிடைக்கவில்லை. மாநாடு விரைவில் நடக்கும். சுவர் விளம்பரத்தை அழிக்க வேண்டாம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டுக்குள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.

அரசுக்கு 22 லட்சம் கடிதம் சென்றுள்ளது. இன்னமும் 28 லட்சம் கடிதங்களை அனுப்ப கட்சியின் நிர்வாகிகள் முயற்சி எடுக்க வேண்டும். இது மிகப்பெரிய அழுத்தமாக இருக்கும். இந்த மாதத்திற்குள் அளிக்காவிட்டால் அடுத்தகட்ட முடிவு ராமதாஸ் எடுப்பார்.

மது ஒழிப்பைப் பற்றி அனைத்து அரசியல் கட்சிகள் பேசும் நிலைக்கு கொண்டு வர ராமதாஸ்தான் காரணம். மதுவினால் சமூக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மதுவை பிரபலப்படுத்தும் அரசாக தமிழக அரசு உள்ளது.

மதுவிடம் இருந்து அடுத்த தலைமுறையை நாம் காப்பாற்ற வேண்டும். 55 ஆண்டுகாலம் 2 கட்சிகள் ஆண்டது போதுமென்ற மனநிலை மக்களுக்கு வந்துள்ளது. 2026ம் ஆண்டு நாம் உறுதியாக ஆட்சிக்கு வருவோம். சமூக ஊடகத்தில் நமக்கு இருக்கும் பலம் வேறு கட்சிகளுக்கு கிடையாது’ என்றார்.

இதைத்தொடர்ந்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, ‘தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு கட்சி பணம் கொடுக்காது. நீங்களும் செலவிட வேண்டாம். மக்களை மட்டும் நம்புங்கள். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நாம்தான் நிரப்ப வேண்டும்.

நம்மிடம் உள்ளதுபோல மனித வளம் எந்த கட்சியிலும் கிடையாது. வன்னியர் சங்கமும், பா.ம.க-வும் இணைந்து இரண்டு தண்டவாளங்களாக இணைந்து நில்லுங்கள். 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்க சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து என் உயிரை விடவும் தயாராக உள்ளேன்.

தமிழ்நாட்டில் நாம் தமிழை வளர்க்க முன்வராவிட்டால் யார் வளர்ப்பார்கள்? தமிழை வளர்க்க ஆர்வம் காட்டாவிட்டால் நீங்கள் இங்கிலாந்தில் இருந்து வந்த வெள்ளைக்காரன் என சொல்லிவிடுவேன் ஜாக்கிரதை’ என்றார்.

இதில் பா.ம.க கௌரவத் தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, கட்சியின் பொருளாளர் திலகபாமா மற்றும் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com