எங்களது நிலத்தை அழித்து தான் அனைவருக்கும் வெளிச்சம் தர வேண்டும் என்றால், அதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது என திரைப்பட இயக்குநர் கௌதமன் ஆவேசமாக தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த மும்முடி சோழகன் கிராமத்தில் என்எல்சிக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களை சென்று இயக்குநர் கௌதமன் ஆறுதல் தெரிவித்து வந்தார். இந்தநிலையில் சேத்தியாத்தோப்பு காவல்துறை கண்காணிப்பாளர் ரூபன் குமார் தலைமையிலான போலீசார் இயக்குநர் கௌதமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேசிய கெளதமன், ”நெய்வேலி என்எல்சி விரிவாக்க பணிக்காக நெய்வேலி சுற்றியுள்ள பகுதிகளை மத்திய அரசு நிறுவனமான என்எல்சி அதனுடன் எழுதப்படாத ஒப்பந்தத்தில் உள்ள தமிழக அரசும் ஒன்றாக இணைந்து கையகப்படுத்தும் பணிக்கு தயாராகி உள்ளது.
மும்முடி சோழகன் கிராமத்தில் ஏற்கனவே அச்சுறுத்தி பாதி இடங்கள் கைப்பற்றப்பட்டது. இந்த பகுதியில் தற்பொழுது சம்பா பயிரிட்டிருக்க வேண்டும் அதற்கு தண்ணீர் வழங்காததால் இதுவரை சம்பா பயிரிடவில்லை. 1956 ஆம் ஆண்டிலிருந்து நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காத நிலையில், தற்போது ஏற்கனவே எழுதி கொடுத்த காரணத்தால் அவர்களின் நிலங்கள் அனைத்தும் பறிக்கப்படுகிறது. இதற்கு காவல்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கிறது. அந்த மக்களின் நிலை என்ன ஆவது.
எனவே ஜனநாயக வழியில் போராட எங்களுக்கு அனுமதி கொடுங்கள்.நீங்கள் அடியுங்கள் அச்சுறுத்தங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் பல்வேறு பிரச்னைகளுக்காக போராட்டங்களை நடத்தி உள்ளேன். இந்த நிலையில், நான் பிறந்த கடலூர் மாவட்டம் பாதிக்கிறது. அது மட்டும் இல்லாமல் அருகில் உள்ள ஆறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதனை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது.
இனி ஒரு அங்குல நிலம் கூட எடுக்கக்கூடாது எங்களது நிலத்தை அழித்து தான் அனைவருக்கும் வெளிச்சம் தர வேண்டும் என்றால், அதை எங்களால் வேடிக்கை பார்க்க முடியாது.
இதை மீறி எங்களது நிலத்தை கொள்ளை அடிக்க வந்தால் கொள்ளையர்களை எப்படி எங்கள் இனம் எதிர்கொள்ளுமோ அதேபோன்று உங்களை எதிர்த்து நின்று யுத்தம் செய்ய தயங்காது என்பதை தெரிவிப்பதுடன், அது இந்திய அரசாக இருக்கட்டும் அல்லது தமிழ்நாடு அரசாக இருக்கட்டும் அல்லது இங்குள்ள அதிகார வர்க்கங்கள் எவராக வேண்டுமானாலும் இருக்கட்டும் என ஆவேசமாக கூறினார்.
மேலும், இந்த விஷயத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் என்ன நடந்ததோ, அதுப்போல மக்களாகிய நாங்களே வெல்வோம்.இந்த மண்ணில் எழுகிற புரட்சியை யாராலும் தடுக்க முடியாது” என எச்சரிக்கை விடுத்தார்.