கொலையாளி கைது செய்யப்படும்வரை கொலையான பா.ஜ.க நிர்வாகி உடலை வாங்க மாட்டோம் - அண்ணாமலை அறிவிப்பு

ஊரில் யார் பெரியவர் என்கிற போட்டியால் பாஜக நிர்வாகி ஜெகனை தீர்த்துக் கட்டியிருக்கிறார், திமுக பிரமுகர் பிரபு
வெட்டிக்கொல்லப்பட்ட ஜெகன், ஜெகனின் சகோதரி சத்யா
வெட்டிக்கொல்லப்பட்ட ஜெகன், ஜெகனின் சகோதரி சத்யா

அரசியல் போட்டி காரணமாக வெட்டிக்கொல்லப்பட்ட பா.ஜ.க நிர்வாகி உடலை வாங்க வேண்டாம் என அண்ணாமலை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாளையங்கோட்டை மூளிக்குளத்தைச் சேர்ந்தவர் ஜெகன் (34 வயது).பா.ஜ.க மாநகர இளைஞர் அணி பொதுச்செயலாளர். கடந்த 30ம் தேதி மூளிக்குளம் கோயில் அருகே மர்ம கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக எட்டு பேர் கைதாகியிருக்கிறார்கள்.போலீஸ் தேடிய ரஞ்சித் என்கிற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்தக்கொலை குறித்து ஜெகனின் சகோதரி சத்யா நம்மிடம் கூறுகையில், மூளிக்குளத்தைச் சேர்ந்த தி.மு.க வி.ஐ.பியும், தச்சநல்லூர் மண்டல சேர்மன் ரேவதியின் கணவருமான பிரபுதான் கூலிப்படையை ஏவி ஜெகனை கொலை செய்திருக்கிறார். ஊரில் யார் பெரியவர் என்கிற போட்டியால் ஜெகனை தீர்த்துக் கட்டியிருக்கிறார்.

பா.ஜ.கவில் சேர்ந்த பிறகு ஜெகன் மிகவும் ஆக்டிவாய் மக்கள் நலப்பணிகளை செய்து அடுத்த ஊர்த்தலைவராய் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய சூழ்நிலையில் அவரது வளர்ச்சி பிடிக்காமல் பிரபு ஆள் வைத்து அவரைக் கொலை செய்திருக்கிறார்.

அண்மையில் நடைபெற்ற உய்க்காட்டு சுடலை கோயில் திருவிழாவை முன்னின்று நடத்தியவர் ஜெகன். இதனால் பிரபுவும் அவரது மனைவி ரேவதியும் கோயிலுக்கே வரவில்லை. தவிர, கவர்னர் தமிழிசை சவுந்தராஜன் நெல்லை வந்த போது கூடவே சுற்றுப்பயணம் செய்தது, அண்ணாமலை நடைபயணத்தை சிறப்பாய் ஏற்பாடு செய்து பா.ஜ.க தலைவர்களால் பாராட்டப்பட்டதை பிரபுவால் ஜீரணிக்க முடியாததாலேயே கொலை நடைபெற்றிருக்கிறது.

கொலையாளி பிரபுவை கைது செய்யும் வரை ஜெகனின் உடலை வாங்க வேண்டாம் என்று தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறார். எனவே அவர் முடிவெடுக்கும் வரை ஜெகனின் உடலை வாங்க மாட்டோம்” என்றார். எனவே நெல்லையில் பதற்றம் தொடர்கிறது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com