அமைச்சர் பொன்முடியின் அறிவிப்புக்கு மாறாக சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் எம்.டெக் வகுப்பு வரும் கல்வி ஆண்டிலும் தொடர்ந்து நடக்கும் என மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு கொடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
'சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் பி.டெக், எம்.டெக் படிப்பு நடத்தப்படுகிறது. ஏ.ஐ.சி.டி.இ அனுமதியோடு, நடத்தப்படுகிறது என்று சொன்னாலும், தனியார் மூலமாக பல்கலையில் இந்த படிப்பு நடத்தப்படுவது விதிகளுக்கு முரணானது' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்திருந்தார்.
சட்டமன்றத்தில் பாமக சட்ட மன்ற கட்சித் தலைவர் கோ.க.மணி கேள்வி நேரத்தின் பொழுது ' சேலம் பெரியார் பல்கலையில் பிடெக் வகுப்பு நடப்பதாகவும் அது தனியார் மூலம் நடத்தப் படுவதால் கட்டணக் கொள்ளை நடப்பதாகவும், அண்ணா பல்கலை தவிர மற்ற கலை அறிவியல் பல்கலைகழகத்தில் பி.டெக் மற்றும் எம்.டெக் நடத்துவதால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புச் சிக்கல் ஏற்படுவதாகவும்' தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 'இனி பி.டெக், எம்.டெக் போன்ற பாடங்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் துவக்கப்பட மாட்டாது. ஏ.ஐ.சி.டி.இ அனுமதி வழங்கி இருந்தாலும் பி.டெக் மற்றும் எம்.டெக் வகுப்புகள் துவங்கப்பட மாட்டாது’’எனவும் அறிவித்தார்.
அமைச்சர் அறிவிப்புக்கு மாறாக சேலம் பெரியார் பல்கலை பதிவாளர் எம்.டெக் வகுப்பு வரும் கல்வி ஆண்டிலும் தொடர்ந்து நடக்கும் என மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு கொடுத்து உள்ளார். இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுவுமில்லமால் ' பி.டெக் கோர்ஸ் பெயரை மாற்றி பி.எஸ்.சி இம்மெர்சிவ் டெக்னாலஜி என்று மாற்றி விட்டு அதே ஸ்கோபிக் நிறுவனத்திற்கு டெண்டர் கொடுத்து உள்ளார்கள். பி.டெக் படிப்பை பி.எஸ்சி என மாற்றியும் விளம்பரபடுத்தி இருக்கிறார்கள். இதுவும் அமைச்சர் அறிவிப்புக்கு எதிரானது’’என்கிறார்கள் பல்கலைகழக ஆசிரியர் வட்டராம்.
இதுப்பற்றி பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனிடம் கேட்டோம். 'ஏ.ஐ.சி.டி.இ அனுமதியோடுதான் கோர்ஸ் செயல்படுகிறது. திடீரென்று நிறுத்த முடியாது. விதிகளின்படிதான் நடத்தப்படுகிறது' என்கிறார்.
அரசுதான் பதில் சொல்லனும்..!