இந்தியாவில் வீரியமான எழுத்தாளர்கள் அனைவருமே சர்ச்சை எல்லைக்குள் வலம் வருபவர்களே. தமிழில் படைப்பின் வழியாக சிறப்பான சம்பவங்களை பண்ணக் கூடிய எழுத்தாளர்கள் பலர் இப்படித்தான் அடிக்கடி சர்ச்சைகளை உருவாக்குவார்கள் அல்லது சர்ச்சைகளில் சிக்குவார்கள்.
அவர்களில் ஒருவர்தான் ஜெயமோகன். குமரி மண்ணை சேர்ந்த இந்த எழுத்தாளுமை இன்று அகிலமெங்கும் தனது எழுத்தின் மூலம் விசிறிகளை சம்பாதித்து வைத்துள்ளார். வலதுசாரி எழுத்தாளர் என விமர்சிக்கப்படும் ஜெயமோகன் இன்று திரைப்படத்துறையிலும் உச்சம்தொட்டு நிற்கிறார்.
மணிரத்னம், ஷங்கர், கமல்ஹாசன் என ஜாம்பவான்கள் ஜெயமோகனை தங்களது படைப்பில் கைகோர்த்துக் கொள்கின்றனர்.
திரைக்கதை உருவாக்கத்தில் மட்டுமில்லாமல் வசனங்கள் எழுதுவதிலும் செம்ம பிஸியான சினிமா வசன கர்த்தாவாக மாறி நிற்கிறார்.
என்னதான் சினிமாவில் பிஸி எழுத்தாளராக இருந்தாலுமே கூட தனது ரசனைக்கான படைப்பாக்கத்தில் இருந்து விலகுவதில்லை. மிக வீரியமான மேடைப் பேச்சாளராகவும் பட்டாசு கிளப்புகிறார் ஜெயமோகன். ஆனால், பல வேளைகளில் அவர் பகிரும் விஷயங்கள்தான் சர்ச்சைப் பொருளாக மாறுகின்றன.
கோவையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் தற்போது கலந்துகொண்டு பேசிய ஜெயமோகன், ‘சங்க இலக்கியங்களில் பழங்கால மக்களின், வாழ்வியல் முறைகள் பிரதிபலிக்கப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்களில் காதல் இல்லை. காமம் மட்டுமே இருந்தது. கம்பராமாயணம் தொடங்கி இது மருவி காதலாக மாறியுள்ளது. ஆனால், சங்க இலக்கியங்கள் இல்லையென்றால் தற்காலத்தில் பக்தி இலக்கியம் இல்லை.
திருவாசங்களையும், திருப்பாவைகளையும் புரிந்து கொண்டிருக்க முடியாது’ என தனது எண்ணங்களை கோணங்களை அடுக்கிச் சென்றார்.
இந்நிலையில் இது இலக்கிய வாசகர்கள், விமர்சகர்கள் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ‘சங்க இலக்கியங்களில் காதல் இல்லை. காமம்தான் இருந்தது என எந்த அளவுகோலை பயன்படுத்தி சொல்கிறார் ஜெயமோகன்? காதல் இல்லாத காமமும் வன்மம். காமம் இல்லாத காதல் குப்பை என்று ஜெயமோகனுக்கு தெரியாதா?’ என்கிறார்கள் விமர்சகர்கள்.
- ஷக்தி