அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருந்தபோது, தி.மு.க எதிர்க்கட்சியாக கூட இருந்ததில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் வருகின்ற 20 -ம் தேதி நடைபெற இருக்கின்ற அ.தி.மு.க எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனையொட்டி, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார், பொது மக்களுக்கு மரக்கன்றுகளை உலகத் தமிழ் சங்கம் அருகில் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிற செய்தி வேதனை அளிக்கிறது. ஏற்கனவே காவிரி டெல்டா பகுதியில் நீரின்றி பயிர்கள் வாடி டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய வேதனையை அளித்துக் கொண்டிருக்கிறது. அது வேதனையின் உச்சம்.
வருகிற 17 மற்றும் 18-ம் தேதி தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மீனவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை பார்த்ததினால் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.
கச்சத்தீவு உரிமையை அன்று கருணாநிதி பறி கொடுக்காமல் இருந்திருந்தால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இந்த கதி ஏற்பட்டு இருக்காது. ராமேஸ்வரம் மீனவர்கள் உரிமையை பறி கொடுத்து விட்டு இன்று அவர்களது மாநாட்டில் பங்கு கொள்ளப் போவதினால் என்ன பயன் கிடைக்கப் போகிறது?
அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி குண்டாறு வைகை இணைப்பு திட்டத்தை கைவிட்ட தி.மு.க அரசினால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
ராமநாதபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டத்திலிருந்து வளம்மிகு மாவட்டமாக மாற்றுவதற்கு எடப்பாடியாரால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தை எந்த நிலையில் இன்று வைத்திருக்கிறீர்கள்? ராமநாதபுரம் மக்களுக்கு பலன் தரக்கூடிய இந்த திட்டத்தை குழிதோண்டி புதைத்து விட்டு இன்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு அங்கு செல்கிறீர்கள்? எப்படி அந்த மக்கள் உங்களை மதித்து வரவேற்பார்கள்?
காவிரியிலும் உரிமை பறி கொடுக்கப்பட்டிருக்கிறது ராமேஸ்வரம் மீனவர்களின் உரிமையும் பறி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அவலம் தொடராமல் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அதற்கு ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும்.
விளம்பர வெளிச்சத்திலே இந்த அரசு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான விழாக்களை நடத்துகிறார்கள். ஆனால் அந்த விழாக்களால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. இந்த அரசை அகற்றுவதற்காக தான், வருகிற ஆகஸ்ட் 20 -ம் தேதி நாங்கள் எழுச்சி மாநாடு நடத்துகின்றோம் என்றவர்,
எடப்பாடியார் அண்ணா திமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்ற 100 நாட்களில், 2 கோடியே 44 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றார்.