புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று அதிகாலை போஸ்டர் ஒன்று பளிச்சிட்டது. அதில் இன்பநிதி பாசறை என்றும் அதில் பாசறையின் மாநில செயலாளர் டாக்டர்.முக.திருமுருகன் என்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் க.செ.மணிமாறன் என்றும் அவர்கள் இருவரின் படத்தையும் அச்சிட்டிருந்ததோடு வரும் செப்டம்பர் 24ம் தேதி இன்பநிதி பாசறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
அதுகூட விசயமில்லை. ஆனால் அடியில் பின்குறிப்பு என்பதைப் போல மண்ணை பிலக்காமல் விதைகள் முலைப்பதில்ல போராட்ட களமின்றி வெற்றிகள் கிடைப்பதில்லை என்று அவர்களுக்குத் தெரிந்த தமிழில் அச்சிடப்பட்டிருந்தது. இது குறித்த தகவலறிந்தவுடன் கட்சியின் தலைமை அவர்கள் இருவரையும் கட்சியின் உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நீக்கம் செய்வதாக அறிவித்துவிட்டது.
இது குறித்து பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளரான மணிமாறன் கூறுகையில் "எனக்கு 56 வயதாகிறது. நான் பிறந்தது முதல் திமுக தான். புதுக்கோட்டை மாவட்டம் உதயமான போது முதல் மாவட்டச் செயலாளர் பெரியண்ணன்; எனது தந்தை வடவாளம் செல்லையா தான் முதல் புதுக்கோட்டை ஒன்றியச் செயலாளர். அப்படி இருக்கும் நிலையில் இப்போது திமுக வடக்கு மாவட்டச் செயலாளராக இருக்கும் கே.கே.செல்லப்பாண்டியன் தனது விருப்பத்திற்கு, அவருக்கு ஜால்ரா அடிக்கும் நபர்களுக்கு மட்டும் கட்சிப் பதவிகளை வழங்கி வருகிறார்.
வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்குக் கூட இப்போது கட்சிப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. காலங்காலமாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் எங்களைப் போன்றவர்களை அடக்கி வைக்க நினைக்கிறார். அதனால் தான் இன்பநிதியின் பெயரில் பாசறை அமைத்து அதற்கான பொறுப்புகளை நாங்களே ஏற்படுத்திக் கொண்டு அதன் பேரில் நலத்திட்ட உதவிகள் வழங்கி எங்களது சமுதாயப் பணிகளைத் தொடர்ந்து செய்ய இருக்கிறோம். அதனால் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். என்ற போதிலும் எங்களது சேவை மக்களுக்குத் தொடரும்" என்றார்.
தமிழில் பல எழுத்துப் பிழைகளோடு போஸ்டரும், அச்சடித்து வெளியிட்டவர்களின் இன்னொருவரான டாக்டர் திருமுருகன் கூறுகையில் "நான் பதினைந்து ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறேன். வடக்கு மாவட்டச் செயலாளர் செய்யும் சில தவறுகளைச் தட்டிக்கேட்டதால் நேற்றுவரை மீனவரணி மாவட்டப் பொறுப்பாளராக இருந்த நிலையில் என்னையும் கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். பாசறை அறிவிப்பு வெளியிட்டதால் கட்சியின் தலைமையிலிருந்தே அறிவித்திருக்கிறார்கள்" என்றார்.
அதானே... இது ஒரு குத்தமா ?
- ஷானு