விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள மீனவ கிராமமான எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே போலி மது குடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் கள்ளச்சாராயம் குடித்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்துச் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த தவறியதால் தான் இன்றைக்கு 18 உயிர்களை நாம் இழந்திருக்கிறோம். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் பகுதியில் 5 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக தி.மு.க ஒன்றிய கவுன்சிலரின் சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள், அதிகாரத்தைப் பயன்படுத்திப் போலி மதுபானம் விற்பனை செய்ததின் மூலமாக அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார்குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவை அனைத்தும் தி.மு.க ஆட்சியில் நடந்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கக் குழு அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டது. கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைத்தோம். தற்போது 2 ஆண்டு திமுக ஆட்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் அதிகரித்து இருக்கிறார்கள். போலி மதுபான விற்பனையாளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். 2 நாட்களில் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1600க்கும் மேற்பட்டோர் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனை பற்றியும், போலி மதுபான விற்பனையாளர்கள் பற்றியும் அரசுக்கு தெரிந்திருக்கிறது.
இதற்கு அரசு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியை மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். அரசின் மெத்தனத்தால் தான் பல உயிர்களை நாம் இழந்திருக்கிறோம்.
தற்போது கூட திண்டிவனம் அருகே எறையானூரில் கள்ளச்சாராயம் குடித்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார். ஆகையால் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய வியாபாரம் தங்கு தடையில்லாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
விலை மதிக்க முடியாத உயிர்களை இழந்து குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதற்கு யார் பொறுப்பேற்பது. தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்னார்கள், ஆனால் தற்போது சாராய ஆறுதான் ஓடிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது” என்றார்.