தர்மபுரி: அ.தி.மு.க எம்.எல்.ஏ-வுடன் தி.மு.க-வினர் வாக்குவாதம் - என்ன நடந்தது?

தர்மபுரி அரசு நிகழ்ச்சி
தர்மபுரி அரசு நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கடத்தூர் தனி ஒன்றியமாக கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் கட்டுவதற்கு கட்டுமான பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், தற்பொழுது புதிய அலுவலகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் வருகை தந்தனர்.

அ.தி.மு.க ஆட்சியில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதை நினைவூட்டும் விதமாக அ.தி.மு.க-வினரும் சாலையோரம் கட்சிக் கொடி கட்டி, விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர். மேலும் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி மூலம் அலுவலகத்தை திறந்து வைப்பதையொட்டி தி.மு.க-வைச் சார்ந்தவர்களும் சாலையோரம் தி.மு.க கொடிக் கட்டி, முதலமைச்சர் படம் பொறித்த விளம்பரப் பதாகைகளை வைத்தனர்.

இதில் அ.தி.மு.க விளம்பரப் பதாகை முன்பு தி.மு.க-வினர் விளம்பர பதாகை வைத்தனர். இதனால் அ.தி.மு.க, தி.மு.க-வினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனை அறிந்த கடத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்பொழுது ‘அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதாலும், ஒன்றியக் குழு தலைவர் அ.தி.மு.க-வை சார்ந்தவர் என்பதால் நாங்கள் விளம்பர பதாகை வைத்துள்ளோம்’ என அ.தி.மு.க-வினர் தெரிவித்தனர்.

அதேப்போல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சியின் மூலம் அலுவலகத்தை திறப்பதால் நாங்கள் விளம்பரப் பதாகை வைத்திருக்கிறோம்’ என தி.மு.க-வினரும் தெரிவித்தனர். இதனையடுத்து இரு தரப்பினரையும் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி சமரசப்படுத்தினர்.

ஒருகட்டத்தில் தி.மு.க-வினர், ‘அ.தி.மு.க சார்பில் பேனர் வைத்தால் கிழிக்கப்படும்’ என, காவல்துறை முன்னிலையில் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் கோபம் அடைந்த காவல்துறையினர் ‘பேனர் மீது கை வைத்தால் கையை உடைத்துவிடுவோம்’ என தி.மு.க-வினரை போலீசார் எச்சரித்தனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி சம்பவ இடத்துக்கு வந்து காவல் ஆய்வாளரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதைத்தொடர்ந்து ‘பேனரை வையுங்கள். எவன் கிழித்துவிடுவான் என்பதை பார்க்கலாம்’ என ஆவேசமாக பேசினார். உடனே தி.மு.க-வினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. உடனே காவல் ஆய்வாளர் நாகலட்சுமி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்.

இந்த சலசலப்பு நடந்த நேரத்திலேயே மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார் அலுவலகத்திற்கு வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்துவிட்டார்.

இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சாந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். ஆனாலும் இருதரப்பிற்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் விழா முடியும் வரை அலுவலக வளாகம் பரபரப்பாகவே இருந்தது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com