'மோடி படம் வைக்க கூடாது' திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு: பாஜக கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்.!

கடையநல்லூர் நகர்மன்ற அரங்கில் மோடி படம் வைக்க கூடாது என தி.மு.க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பா.ஜ.க கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவிப்பு
கடையநல்லூர் நகராட்சி கூட்டம்
கடையநல்லூர் நகராட்சி கூட்டம்

தென்காசி மாவட்டம் கடையநல்லுர் நகராட்சியில் உள்ள மொத்த கவுன்சிலர்களின் எண்ணிக்கை 33, இதில் தி.மு.க கவுன்சிலர்கள் மட்டும் 16 பேர், தனி மெஜாரிட்டி என்பதால் தி.மு.கவைச் சேர்ந்த ஹபீபுர் ரஹ்மான் தலைவரானார். அவர் தலைவராய் பொறுபேற்றதும், நகர்மன்ற கூட்ட அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் மாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க கவுன்சிலர்கள் சங்கரநாராயணன், ரேவதி, மகேஸ்வரி ஆகிய மூன்று பேர்களும், நகர்மன்ற கூட்டத்தின் போது அரங்கில் பிரதமர் மோடி படம் மாட்ட வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டு வந்தனர். அந்த தீர்மானம் ஒருமனதாய் நிறைவேறியது. ஆனால், அப்போது பிரதமர் மோடியின் படத்தை பா.ஜ.கவினர் வைக்கவில்லை.

மோடி படம் வைக்க கோரி தர்ணா போராட்டம்
மோடி படம் வைக்க கோரி தர்ணா போராட்டம்

தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 7 மாதங்களான நிலையில் கடந்த 29ம் தேதி பா.ஜ.க கவுன்சிலர்கள் நகர்மன்ற அரங்கில் பிரதமரின் படத்தை மாட்டியிருக்கிறார்கள். இதற்கு ஒட்டு மொத்த தி.மு.கவினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமர் படம் அகற்றப்பட்டது. இதனால் டென்சனான பா.ஜ.க கவுன்சிலர்கள் பிரதமர் படத்தை வைக்கக் கோரி நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கமிஷனர் சுகந்தி தனது ஜீப்பில் வீட்டுக்கு கிளம்பினார். இதை அறிந்த கவுன்சிலர்களும், பா,ஜ.கவினரும் சுகந்தியின் கார் முன்னாள் படுத்துகொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு உருவானது. அவர்களை சமாதானப்படுத்தி விட்டு கமிஷனர் புறப்பட்டார்.

கடையநல்லூர் நகராட்சி கூட்டம்
கடையநல்லூர் நகராட்சி கூட்டம்

இது குறித்து பா.ஜ.க கவுன்சிலர் சங்கரநாராயணன் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி நடைபெற்ற நகர்மன்றக் கூட்ட அரங்கில் பிரதமர் மோடி படம் வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில் தான் பிரதமரின் படத்தை வைத்தோம், இப்போது திடீரென தி.மு.க கவுன்சிலர்கள் ஏன் மறுப்பு தெரிவிக்கிறார்களோ தெரியவில்லை. பிரதமர் படம் வைக்காதவரை போராட்டம் தொடரும்" என்றார். இதற்கு தி.மு.க கவுன்சிலர் முத்து கூறுகையில், "ஏழு மாதங்களூக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இப்போது செல்லாது என்பதாலேயே படத்தை வைக்க எதிர்ப்பு தெரிவித்தோம்" என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com