இருந்த இடத்தில் இருந்தே விளை பொருட்களை விற்றுக் கொள்ளலாம்- விவசாயிகளுக்கு அழைப்பு

மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் அறியும்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடத்தவேண்டும்.
இருந்த இடத்தில் இருந்தே விளை பொருட்களை விற்றுக் கொள்ளலாம்-  விவசாயிகளுக்கு அழைப்பு

தோட்டத்தில் இருந்தே விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்ய திருச்சி ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் விவசாயிகளின் நலன் கருதி விளைபொருட்களை நேரடியாக அவரவர் தோட்டத்திற்கே சென்று கொள்முதல் செய்து விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக தொகையை வரவு வைக்கும் முறை அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில் திருச்சியிலும் 5 நேரடி கொள்முதல் நிலையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றது.

விவசாயிகள் இ-நாம் திட்டத்தில் விளைபொருட்களை விற்பனை செய்து பயன்பெற திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, "விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசால் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் (e-NAM - e National Agriculture Market - மின்னணு வேளாண் சந்தை) செயல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை இணையம் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 157 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, இலால்குடி, மணப்பாறை, துவரங்குறிச்சி மற்றும் துறையூர் ஆகிய 5 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இ-நாம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இ-நாம் முறையில் ஏல நடைமுறைகள் அனைத்தும் மின்னணு முறையில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படுவதால், பிற மாநிலம், பிற மாவட்டம் மற்றும் பிற ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் இருந்தும் வணிகர்கள் பங்கேற்று ஏலம் கோர முடியும் என்பதுடன் துல்லியமான தர அளவுகள் உறுதி செய்யப்படுவதால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அதிக விலை கிடைக்கின்றது. தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவாக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இ-நாம் திட்டத்தில் பண்ணை வாயில் வணிகம் (FARM GATE SALES) என்ற முறை அரசால் தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு எடுத்து வருவதற்கான ஏற்றுக்கூலி, போக்குவரத்து செலவினங்களை முழுமையாக குறைத்திடும் நோக்கில் விவசாயிகளின் இருப்பிடம் அல்லது தோட்டத்திற்கே ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலர்கள் நேரில் சென்று இ-நாம் செயலி மூலம் விளைபொருட்களை விற்பனை செய்து தருவதுடன் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதை உறுதி செய்யும் வழியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, திருச்சி மாவட்ட விவசாயிகள் அனைவரும் அருகாமையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை அணுகி இ-நாம் மற்றும் பண்ணை வாயில் வணிகம் மூலம் தாங்கள் உற்பத்தி செய்யும் வேளாண் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன்" எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

இதுகுறித்து காவிரி டெல்டா பாசனம் விவசாய சங்க கூட்டமைப்பு தலைவர் காட்டுமன்னார்கோவில் இளங்கீரன், "இந்த இ-நாம் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று. எந்த இடைத்தரகரும் இன்றி விவசாயிகளுக்கு உற்பத்திக்கான பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இது பேருதவியாக இருக்கும். போக்குவரத்து செலவினங்கள் முற்றிலும் தவிர்க்கப்படுவதால் பணமும் மிச்சமாகும்.

இந்த இணைய வணிகம் என்பது சமீபத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதால் இதுகுறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு போதிய அளவு இல்லை. ஆகவே, இந்தத் திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் அறியும்படியான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் நடத்தவேண்டும்.

அதேநேரம், இந்தத் திட்டத்தில் வெளி மாநில விவசாயிகளும் பங்குகொள்வது என்பது வரவேற்கத்தக்கது. இரண்டு மாநில விவசாயிகளுக்கிடையேயான உறவை நல்லுறவாக்க இது ஏதுவாக அமையும்" என்றார்.

- ஷானு

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com