மயிலாடுதுறை, மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டுவருகிறது. இதில் புத்தூரிலிருந்து வடரங்கம் செல்லும் சாலையில் குன்னம் கிராமத்தில் அரசு மணல் குவாரிக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனுக்கு எதிரே உள்ள விளைநிலங்களில் உள்ள மின் மோட்டாருக்கான மின் கம்பிகள் கான்கிரீட் கம்பங்களில் சென்று கொண்டுள்ளது.
நேற்றைய தினம் புத்தூரிலிருந்து வடரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்த மணல் லாரி ஒன்று அதி வேகமாக சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ஆறு மின் கம்பங்களில் தொடர்ச்சியாக மோதியிருக்கிறது. இதில் ஆறு மின்கம்பங்களும் முறிந்து விழ, அறுந்து கிடந்த மின் கம்பிகளின் மின் இணைப்பை அரசூர் மின் வாரிய அலுவலர்கள் விரைந்துவந்து துண்டித்தனர். இதனால், பெரும் விபரீதம் நிகழாமல் தடுக்கப்பட்டது.
அப்பகுதி பொதுமக்களிடம் பேசினோம். “முறிந்து விழுந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்களை நடுவதற்கான முயற்சியில் மின் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த பகுதிகளில் செல்லும் மணல் லாரிகள் எப்போதும் அதிக வேகத்துடந்தான் செல்கிறது. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டது.
பொதுமக்கள் அச்சத்துடனே நடமாட வேண்டியிருக்கிறது. அதேபோல் சாலையில் ஓரம் இருக்கும் மின் கம்பங்களின் மீது மோதுவது, இதனால், மின் இணைப்புகள் துண்டிக்கப்படும் சம்பவங்களும் அதிக அளவில் நடைபெறுகிறது. புத்தூர், கடுக்காமரம், குன்னம், பெரம்பூர், மாதிரவேளூர், சென்னியநல்லூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் மணல் லாரிகளால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகளிடம் எந்தவித ரெஸ்பான்ஸும் இல்லை. மணல் லாரி அதிபர்கள் அதிகாரிகளை பணத்தால் அடித்து வாயை மூடிவிடுகிறார்கள்” என்றனர் ஆவேசத்துடன்.
மின்வாரிய அதிகாரிகளோ,”கட்டுப்பாடில்லாமல் அதிவேகத்துடன் செல்லும் மணல் லாரிகள் மின் கம்பங்களில் மோதி சேதப்படுத்துவது என்பது அடிக்கடி நடக்கின்றது. இது குறித்து லாரி உரிமையாளர்களிடம், ‘எங்கள் லாரி மின்கம்பத்தில் மோதவில்லை’ என்று மறுத்துவிடுகின்றனர். நாங்கள் எப்படி புகார் செய்வது? ஒவ்வொரு மின் கம்பத்திலும் சிசிடிவி கேமராவா பொருத்தமுடியும்?” என்றனர்.
கொள்ளிடம் போலீசாரோ, “அதிக வேகத்தில் செல்லும் லாரிகளுக்கு அவ்வப்போது அபராதமும் விதித்து வருகிறோம். இருப்பினும் லாரி உரிமையாளர்களை அழைத்துப்பேசி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண முயற்சிக்கிறோம்” என்றனர்.
-ஆர்.விவேக் ஆனந்தன்