ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தையொட்டி அமைந்துள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தவர் சர்மிளா.
நடக்க முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் மாணவி சர்மிளாவை அவரது தாய் நாள்தோறும் பள்ளிக்கு தூக்கி வந்து படிக்க வைத்துள்ளார்.
ஆனால் தாயின் சிரமத்தை பார்த்த பள்ளி நிர்வாகம் அவர் தனது குழந்தையை நாள்தோறும் தூக்கி சுமப்பதை தவிர்க்கும் வகையில் வீட்டில் இருந்தே படிக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சர்மிளாவை அவரது தாய் புவனேஸ்வரி பல்வேறு சிரமத்துக்கு மத்தியில் வீட்டிலேயே படிக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் 10ம் வகுப்பு பொத்தேர்வுகள் தொடங்கியதை தொடர்ந்து மகளை எப்படியாவது தேர்வு எழுத வைத்து ‘பாஸ்’ ஆக்கிவிட வேண்டும் என விரும்பிய புவனேஸ்வரி தினமும் சர்மிளாவை பள்ளிக்கு தூக்கிவந்து தேர்வு எழுத வைத்துள்ளார்.
இதன் பலனாக 10ம் வகுப்பு தேர்வில் 500 க்கு 235 மதிப்பெண்கள் பெற்று சர்மிளா தேர்ச்சி பெற்றுள்ளார். இதனால் மகிழ்ச்சியின் எல்லைக்கேப்போன புவனேஸ்வரி தனது அன்பு மகளை அள்ளி அணைத்து இனிப்பு ஊட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.
அதே சமயம் நடக்க முடியாது என்றாலும் தன்னம்பிக்கை இழக்காமல் வீட்டில் இருந்தே படித்த தேர்ச்சி பெற்ற சர்மிளாவின் விடா முயற்சியை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சர்மிளாவின் தாயார் புவனேஸ்வரி கூறுகையில், ‘தமிழக அரசு மனது வைத்தால் தன்னுடைய மகள் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்வாள்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- கோபிகா ஸ்ரீ