திண்டுக்கல் அருகே மயானத்திற்கு செல்ல பாதையே இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலநிலை உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட அப்பிய நாயக்கன்பட்டி பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 50-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் திண்டுக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வேலைக்கு மற்றும் கல்வி பயில அப்பியநாயக்கன்பட்டிக்கு அருகே உள்ள சந்தனவர்தினி ஆற்றின் ஓடையைக் கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாகச் சந்தான வர்த்தினி ஓடை அருகே இறந்தவர்களின் உடலை புதைத்து வந்தனர். தற்போது அப்பியநாயக்கன்பட்டி கிராம மக்களுக்காக மயானத்திற்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்திற்குச் செல்வதற்குப் பாதைகளை முறையாகப் பாலகிருஷ்ணாபுரம் பஞ்சாயத்து தலைவர் செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் இறந்தவரின் உடலை மயானத்திற்குச் செல்லும் வழியில் சந்தான வர்த்தினி வாய்க்கால் உள்ளதால் தற்போது பெய்துள்ள மழையின் காரணமாக வாய்க்கால் முழுவதும் நீர் நிரம்பியுள்ளது. இதனால் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர்களின் உடலை சுமந்து கொண்டு சென்று புதைக்கக் கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மயானத்திற்குச் சாலை வேண்டுமென்று பலமுறை பஞ்சாயத்து தலைவர் ரேவதி நாகராஜிடம் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிர்வாகம் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.