தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை 3,324 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 36,593 பள்ளி மாணவர்கள், 23,747 தனித் தேர்வர்கள், 5,206 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர் மற்றும் 90 சிறைக் கைதிகள் என மொத்தம் 8.65 லட்சம் பேர் எழுத பதிவு செய்திருந்தனர்.
இதில் 8.17 லட்சம் மாணவர்கள் தேர்வில் எழுதினர். சுமார் 48000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் பங்கேற்வில்லை. தேர்வுக்கு பிறகு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 10ம் தேதி முதல் 21ம் தேதி வரை 79 மையங்களில் நடந்தது.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
அதன்படி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் இந்த முறை 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 755451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டு மாணவிகள் 405753 பேர் (96.38 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.4 சதவீதம் பேர் ( 349697 பேர்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவிகள் 4.93 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தை திருப்பூர் (97.79%), மூன்றாம் இடத்தை பெரம்பலூர் (97.59%) ஆகிய மாவட்டங்கள் பெற்றுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை பிளஸ் 2 தேர்வுகளில் இல்லாத ஒரு வரலாற்று சாதனையை திண்டுக்கல் மாவட்ட மாணவி நந்தினி படைத்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் மாணவி ஒருவர் 600க்கு 600 மதிப்பெண்கள் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
இத்தகைய பெருமையை சேர்த்த மாணவி நந்தினிக்கு திண்டுக்கல் அரசு உதவிபெறும் பள்ளியின் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.